இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தது. சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக அமைந்தார்.
அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார், அவரது ஸ்ட்ரைக் ரேட் 247.61 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷனும் அதிரடியை தொடர்ந்து 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்திய நீஷம் ஓரளவிற்கு முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும், கடைசி நேரத்தில் திலக் வர்மா மற்றும் ஷிவம் துபே ஜோடி அணியை 250 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது.
256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பயணித்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். ஆலன் 9 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் மட்டும் ஓரளவிற்குப் போராடி 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் நியூசிலாந்து அணி நிலைகுலைந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு பக்கபலமாக இருந்த அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சிறிது நேரம் போராடினாலும், பும்ராவின் வேகத்தில் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. 19 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சஞ்சு சாம்சனின் அபாரமான பேட்டிங் மற்றும் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சு இந்த போட்டியின் சிறப்பம்சங்களாகும். நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தடுமாறியது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வரவிருக்கும் போட்டிகளிலும் இந்திய அணி இதே போன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
