டி20 மற்றும் ஒருநாள் போட்டி உள்ளிட்டவற்றில் நிறைய தோல்விகளை இந்திய அணி சந்தித்து வந்தாலும் டெஸ்ட் போட்டியில் அசைத்து பார்க்க முடியாத அணியாக தான் உள்ளது. முன்பெல்லாம் வெளிநாட்டு மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அங்கே வெற்றிகளை குவித்து சாதனைகள் புரிவதில் நிறைய தடுமாற்றங்களை சந்திக்கும்.
அணியில் நிறைய தலைச்சிறந்த வீரர்கள் இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் தலைவலியாக மாறி தோல்விக்கான வழியிலும் கொண்டு போய் சேர்க்கும். ஆனால் மெல்ல மெல்ல வெளிநாட்டு மண்ணின் சூழலை அறிந்து கொண்டு அங்கே கவுண்டி கிரிக்கெட் உள்ளிட்ட தொடர்களையும் ஆடி இன்று பல வீரர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மண்ணிலும் சாதித்து வருகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வென்று பல சாதனைகளைப் புரிந்திருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் ஆட உள்ளதால் இந்த முறையும் தொடரை சொந்தமாக்கி ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி சொந்தமாக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
வெளிநாட்டு மண்ணிலேயே இப்படி அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிகளில் சொந்த நாட்டில் தொட்டு கூட பார்க்க முடியாத அணியாக இருந்து வருகிறது. தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை நன்றாக வழி நடத்தினாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் கேப்டன் விராட் கோலி தான் நம்பர் ஒன் அணியாக மாற்றி இருந்தார்.
அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்டில் மிக முக்கியமான இடத்தை பிடித்ததுடன் மட்டுமில்லாமல் பல வெற்றிகளையும் ருசித்திருந்தது. இதே நிலைதான் ரோஹித் ஷ்ர்மாவின் தலைமையிலும் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் கூட அவரது தலைமையில் இந்திய அணி இழக்கவில்லை.
இதனிடையே இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி சரித்திரம் படைத்திருந்த வங்கதேச அணி அதே போன்று சவாலாக இந்திய அணிக்கு விள்ங்குவார்கள் என எதிர்பார்த்தால் பெட்டி பாம்பாய் அடங்கி போய் விட்டார்கள் என்றே சொல்லலாம்.
515 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி, 234 ரன்களில் ஆல் அவுட்டாகியதால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகித்துள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றாலும் இந்திய அணி இந்த தொடரை இழக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு சூழலில் சொந்த மண்ணில் கடந்த 12 ஆண்டுகளாக அதாவது 4302 நாட்களாக ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல் சாதனை புரிந்துள்ளது இந்திய அணி. இவர்களுக்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்க அணி 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருந்து வருகிறது. மற்ற எந்த அணிகளும் இந்தியாவுக்கு நிகராக இத்தனை ஆண்டுகள் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவதில்லை என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.