முதல் முறை சிக்ஸ் அடித்தால் ரன்கள் கிடையாது, இரண்டாவது முறை சிக்ஸ் அடித்தால் அவுட் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்ஸர் அடிப்பது என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி அந்த விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணியில் வீரர்கள் சிக்சர் அடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த கிளப்பில் உள்ள வீரர்கள் விளையாடும் மைதானம் அருகே குடியிருப்பு வீடுகள் இருப்பதை அடுத்து இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் சிக்சர் அடிக்கும் போது வீடுகளில் உள்ள ஜன்னல்கள் கதவுகளில் பட்டு சேதமாவதாகவும், குறிப்பாக பல கார்களின் கண்ணாடிகள் சிக்சர் அடிப்பதால் சேதம் அடைந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து கிளப் நிர்வாகம் இதற்கு தீர்வு காணும் வகையில் இனிமேல் வீரர்கள் சிக்சர் அடிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது. முதல் முறை சிக்சர் அடித்தால் ரன் கிடையாது என்றும் இரண்டாவது முறை சிக்சர் அடித்தால் அவுட் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இந்த கிளப்பில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிக்ஸர் அடிப்பது என்பது ஒரு கிரிக்கெட் வீரரின் முக்கியமான சாதனை, அதை எப்படி தடை செய்ய முடியும் என்று இந்த தடை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மைதானத்தை சுற்றி இருக்கும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த தடையை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.