ஐசிசி டி20 உலகக்கோப்பை.. கோடியில் மிதக்கும் கிரிக்கெட் வீரர்கள்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி? ரன்னர் நியூசிலாந்துக்கு எத்தனை கோடி? அனைத்து 20 அணிகளுக்கும் வாரி வழங்கிய ஐசிசி..

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்திய 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20…

india champion1

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்திய 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கோப்பைக்காக போட்டியிட்டன. இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகவும் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவிலான ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

ஐசிசி இந்தத் தொடருக்காக மொத்தம் சுமார் ரூ.101 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியிருந்தது. இதில் பங்கேற்ற ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்ச உத்தரவாத தொகையாக சுமார் ரூ.1.03 கோடி வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மட்டும் ரூ.21.5 கோடி பரிசுத்தொகையாகக் கிடைக்கும். இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணி ரூ.10.75 கோடி தொகையை பெறுகிறது.

அரை இறுதி வரை முன்னேறி தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ரூ.6.20 கோடி வழங்கப்படுகிறது. மேலும், புள்ளிப் பட்டியலில் 5 முதல் 8 இடங்களை பிடித்த அணிகளுக்கு ரூ.2.48 கோடியும், 9 முதல் 12 இடங்களுக்கு ரூ.1.24 கோடியும் பரிசாக கிடைக்கும். இது தவிர, ஒவ்வொரு வெற்றிக்கும் தனித்தனியாக ரூ.28.64 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது சிறிய அணிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் இந்த உலகக்கோப்பை பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற இந்தியா மீது சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற அபார வெற்றி இந்தியாவை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதியடைய செய்தது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் ஒரு தோல்வியை சந்தித்தாலும், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது.

அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும், பட்டத்தை தக்கவைத்த முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு கூடுதல் பரிசுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.