கில்லுக்கும், ரோஹித்துக்கும் சண்டையா.. இந்திய அணியில் இருந்து விலகுகிறாரா இளம் வீரர்?.. உண்மையில் நடந்தது என்ன??..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி டி 20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக 15 வீரர்களை கொண்ட அணியைத் தேர்வு செய்திருந்தது. இதில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சிலர் அணியில் தேர்வாகாமல் போக, சஞ்சு சாம்சன், சாஹல், ஷிவம் துபே உள்ளிட்ட பலருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், லீக் போட்டிகளில் ஷிவம் துபே, ஜடேஜா என பலரும் சோபிக்காமல் போக, சாஹல் மற்றும் சாம்சன் ஆகியோருக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், அதே வேளையில் ரிங்கு சிங், சுப்மன் கில் என டி 20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்கள், 15 பேர் கொண்ட லிஸ்டில் இடம் பிடிக்கவில்லை. மாறாக, அந்த 15 பேரைத் தாண்டி ரிசர்வ்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் ஆவேஷ் கானும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக, பல்வேறு விமர்சன கருத்துக்களும் இருந்தாலும் இந்திய அணியில் இடம்பிடித்த சில வீரர்கள் மீது எதிர்பார்ப்பும் அதே வேளையில் உருவாகி இருந்தது. இதற்கிடையே இந்திய அணி நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் 3 போட்டிகள் ஆடிய முடிவில் சூப்பர் 8 சுற்றிற்கும் முன்னேறி இருந்தது.

இந்த போட்டியிலும் யார் எல்லாம் இந்திய அணிக்காக ஆடுவார்கள் என எதிர்பார்த்தார்களோ அவர்கள் யாருமே சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக பந்து வீச்சில் மட்டுமே மாஸ் காட்டிய இந்திய அணி, பேட்டிங்கில் கொஞ்சம் கூட திறனை வெளிப்படுத்தவில்லை. ரோஹித், கோலி, ஜடேஜா உள்ளிட்ட பலரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளிக்காத போதிலும் பந்து வீச்சின் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இன்னொரு பக்கம் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்கி விட்டு, கோலி 3 வது வீரராக களமிறங்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிப்ட்டு வருகின்றனர். ஆனால், கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் இடம்பெற்றிருந்ததும் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. டி 20 போட்டிகளில் கில் சிறந்த தொடக்க வீரராக இருந்தாலும் அவர் ரிசர்வர்டு வீரராக இடம்பிடித்திருந்தார்.

அப்படி இருக்கையில், கில் மற்றும் ரோஹித் ஆகியோருக்கிடையே சண்டை உருவானதாகவும் தகவல்கள் வெளியானது. இன்னொரு பக்கம், ரிசர்வ்டு வீரராக இருந்த பலரும் சரியாக இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கில் அப்படி இடம்பெறாமல் போக, போட்டிக்கு மத்தியிலும் இந்திய அணி வீரர்களுடன் இல்லாமல் தனது வணிக ரீதியிலான விஷயங்களுக்காக அமெரிக்காவில் வலம் வந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனால் கில்லை இந்திய அணியில் இருந்து பிரிந்து ஊருக்கு கிளம்ப சொன்னதாகவும் மற்றொரு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால், இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாக, இதில் உண்மை என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி லீக் போட்டிகள் முடிவடைந்து விட்டதால் இனி ரிசர்வ்டு வீரர்களில் சிலரின் தேவை இருக்காது என ஆவேஷ் கான் மற்றும் கில் ஆகியோரை இந்தியாவிற்கு திரும்ப சொன்னதாக உண்மையான தகவலும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.