நட்புன்னா இப்படில இருக்கணும்.. ரோஹித், கோலிய சேர்த்து வெச்சு கலாய்க்கும் ரசிகர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

Published:

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதே வேளையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணி தற்போது கிரிக்கெட் போட்டிகளை ஆடத் தொடங்கியுள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவு ஒரு பக்கம் சாதகமாகவே முடிந்துள்ளதாக தெரிகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேச அணியின் பந்துவீச்சும் சிறப்பாக அமைய இந்திய அணிக்கும் அதே அதிர்ச்சியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தான் இந்திய அணியின் தொடக்க பேட்டிங் விக்கெட் வீழ்ந்து வங்கதேச அணியின் கை ஓங்கியதும் அவர்களின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

கோலி, ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக, இந்திய அணி 34 ரன்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதன் பின்னர் கைகோர்த்த ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், பந்த் 39 ரன்களிலும் அவுட்டாக, பின்னர் வந்த ராகுலும் 16 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ஒரு இக்கட்டான சூழலை எட்டியிருந்தது. ஆனால் இதன் பின்னர் கைகோர்த்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து முதல் நாள் முடிவையே தலைகீழாக மாற்றி இருந்தனர்.

வங்கதேச அணியின் கட்டுப்பாட்டில் இருந்த போட்டி இந்தியாவின் பக்கம் திரும்ப முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை எடுத்திருந்தது. 38 ஓவர்கள் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்ட அஸ்வின் – ஜடேஜா ஜோடி சிறப்பாக ரன் சேர்த்ததால் எதுவும் செய்ய முடியாமல் வங்கதேச அணியின் பந்து வீச்சாளர்கள் தடுமாற்றமும் கண்டனர்.

இதில் பந்துவீச்சில் மட்டும் கலக்கும் இவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் பட்டையை கிளப்ப, அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பலரும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பாராட்டி வரும் அதே வேளையில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோரை சேர்த்து அதிகம் கலாய்த்து வரும் சம்பவமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் தலா ஆறு ரன்கள் எடுத்து சிறிய இடைவேளையில் அவுட்டாகி இருந்தனர். ரோஹித், கோலி ஆகிய சீனியர் வீரர்கள் இந்திய அணியின் பேட்டிங்கில் தூணாக இருக்கும் சூழலில் இருவரும் சொதப்பிய போட்டியில் ஒரே போன்று ரன் அடித்ததை தான் ரசிகர்கள் தற்போது அதிகமாக கலாய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நட்பென்றால் இப்படித் தான் ஒரே போல ரன் அடித்து அவுட்டாக வேண்டுமென வேடிக்கையாகவும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...