ஒரு ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி ஏழாவது ஆட்டக்காரராக ஏன் களம் இறங்கினார். அப்படியே களமிறங்கினாலும் சில பந்துகளை அவர் செட் செய்து விட்டு தான் அடிக்க ஆரம்பித்தார்? சில பந்துகளை செட் ஆக அமைத்து கொள்ள வேண்டுமென்றால், ஏன் ஏழாவது நிலையில் களமிறங்க வேண்டும்? முன்கூட்டியே களமிறங்கி இருக்கலாமே என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தோனி ஒரு சிறந்த ஹிட்டர், மாஸ்டர் பினிஷர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் தற்போது தோனி விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவருடைய மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை அவரிடம் சுத்தமாக இல்லை. எனவே, அவர் அணியில் இருந்து விலகி, பயிற்சியாளராக மட்டுமே இருக்கலாம். நல்ல அணியின் பார்மை அவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜாவும் சமீப காலமாக சரியாக விளையாடவில்லை. இந்த இருவரையும் நம்பினால் இனி சிஎஸ்கேக்கு வெற்றி கிடைக்காது என்று கூறும் நிலைமை வந்துவிட்டது. “தோனி ஒரு நம்பிக்கை தரும் வீரர்” என்பதெல்லாம் கடந்த காலம் தான். இனிமேல் அவர் தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது இளைஞர்களுக்கு வாய்ப்பு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கான்வேவை மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்து, அவரை இன்னும் ஒரு போட்டியிலும் பயன்படுத்தாமல் இருப்பது முட்டாள்தனம் தான். தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் ருத்ராஜ் விளையாடுவதே சரியான தேர்வாக இருக்கும். திரிப்பாட்டி எந்த காரணத்திற்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுகிறார் என்பதே புரியவில்லை.
சிஎஸ்கே தனது ஸ்ட்ராட்டஜியை மாற்றினாலே வெற்றியை பெற முடியும். இல்லையென்றால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.