ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர்கள் என்பது மிக குறைவாக சென்றாலும் டி20 வந்துவிட்டாலே சிக்ஸருக்கு எந்த போட்டியிலும் பஞ்சம் இருக்காது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருந்து வரும் ஒரு டி 20 லீக் தொடர் தான் ஐபிஎல்.
2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வைத்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு டி 20 தொடராகும். அதிலும் நடப்பு ஐபிஎல் சீசன், அனைத்து சீசன்களுக்குமே ஆசானாக இருந்து வருவதுடன் மட்டுமில்லாமல் அதிரடிக்கு பெயர் போன பல்வேறு சாதனைகளையும் புதிதாக படைத்து வருகிறது.
இந்த சீசனில் பலமுறை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக சிக்ஸர்களையும் இந்த சீசன் அடித்த பெருமையை விரைவில் பெற்று விடும் என்று தெரிகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் இந்த சீசனில் சென்றுள்ள நிலையில் இதுவரை அதிக சிக்ஸர்கள் சென்ற சீசனாக கடந்த 2023 ஐபிஎல் இருந்து வரும் சூழலில், அதனை மிக விரைவில் முறியடித்து புதிய வரலாறு இந்த முறை எழுதப்படும் என்றே தெரிகிறது.
இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவராக முதலிடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா 276 சிக்ஸர்களுடனும், விராட் கோலி 264 சிக்ஸர்களுடனும் ஏபிடி மற்றும் தோனி ஆகியோர் தலா 251 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதில் சிஎஸ்கே கேப்டனாக இருந்து வரும் தோனி, சிக்ஸர்கள் மட்டுமில்லாமல் ஸ்ட்ரைக் ரேட்டிலும் பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தபோதும் கூட கடைசி கட்டத்தில் உள்ளே வந்த தோனி 3 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை ஓரளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.
இந்த சீசனிலேயே நிறைய சிக்ஸர்களை பறக்க விட்டிருந்த தோனி, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் பவுண்டரிகளாக தான் மாற்றி வருகிறார். அப்படி இருக்கையில் தோனி அடித்த 251 சிக்ஸர்களில் 103 சிக்ஸர்களுக்கு பின்னால் இருக்கும் ஒரு மோசமான சோக கதையை தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்து அவை தோல்வியில் முடிந்துள்ள வரிசையில் முதலிடத்தில் உள்ளார் க்றிஸ் கெயில். இவர் ஆடி அணி தோல்வியடைந்த போது 108 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக விராட் கோலி 108 சிக்ஸர்களுடனும், ரசல் 106 ரன்களுடனும் இருக்க இவர்களுக்கு அடுத்தபடியாக தான் தோனி அடித்த 103 சிக்ஸர்கள் தோல்வியில் முடிந்துள்ளது.
சிஎஸ்கேவுக்காக அதிக சிக்சர்கள் அடித்த சிஎஸ்கே வீரராக இருக்கும் தோனியின் பின்னால் இப்படி ஒரு மோசமான சம்பவம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.