ஆப்கானிஸ்தான் செமி வர காரணமா இருந்த லாரா.. பல நாளுக்கு முன்னாடியே ரஷீத் கான் கொடுத்த வாக்கு..

தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியதை பற்றி தான் வியப்பில் பல வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இவர்கள் எல்லாம் லீக் சுற்றுடன் தான் வெளியேற போகிறார்கள் என்ற பெயர் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்து வந்தது.

முகமது நபி, ரஷீத் கான், குர்பாஸ், குல்பதீன் என பல சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தபோதிலும் அவர்களால் ஒரு முறை கூட ஐசிசி தொடர்களில் வெற்றிகளை குவித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையிலும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி வாய்ப்பை தவற விட்டதால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்திருந்தனர். ஆனால் இந்த முறை இன்னும் அசுர பலத்துடன் விளங்கி இருந்த ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை லீக் சுற்றில் வீழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் தோல்வி அடைந்தாலும், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி இருந்தது. அதிலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கைவிட்டு போன போட்டியை ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் திரும்ப கொண்டு வந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தனர்.

இதன் மூலம் முதல் முறையாக ஐசிசி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. அப்படி ஒரு சூழலில் இதற்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ப்ரைன் லாரா காரணமாக இருந்த தகவல் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. டி 20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக பலரும் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது பற்றி கணிப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

அதில் பெரும்பாலான வீரர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளைத் தேர்வு செய்ய ப்ரைன் லாரா மட்டும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என குறிப்பிட்டிருந்தார். இந்த கணிப்பு தற்போது நிஜமாகி பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ள நிலையில், இதுபற்றி அரையிறுதிக்கு முன்னேறியதற்கு பின் பேசியிருந்தார் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்.

“பிரைன் லாரா மட்டும்தான் எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை பார்த்தபோது உங்களின் வாக்கை நாங்கள் நிச்சயம் பொய்யாக்க மாட்டோம் என வாக்கு கொடுத்திருந்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மற்ற யாருமே கணிக்காத ஒன்றை லாரா கணித்ததுடன் மட்டுமில்லாமல் அதனை நிஜமாக்கி காட்டுவோம் என சூளுரைத்து ரஷீத் கான் செய்த விஷயம் ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.