இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த ஸ்விங் பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் புவனேஸ்வர் குமார். இவர் பல போட்டிகளில் எதிரணி வீரர்கள் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் தனது ஸ்விங் பந்து வீச்சால் முதல் ஓவர்களிலேயே விக்கெட் எடுத்து பட்டையை கிளப்பி இருப்பார். ஆனால் இன்னும் தொடர்ந்து இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடி இருக்க வேண்டிய புவனேஸ்வர் குமார், சில தொடர்களில் சிறப்பாக ஆடாத அதே சூழலில் காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையில் பல இளம் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் அவரது இடத்தை தட்டிப் பறித்து விட்டனர்.
இதனால் ரஞ்சிக் கோப்பை, ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் மட்டும் பந்து வீசி வரும் புவனேஸ்வர் குமார் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அப்படி ஒரு சூழலில் தான் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு இந்திய பந்து வீச்சாளரும் செய்யாத மோசமான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் புவனேஸ்வர் குமார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி, 263 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோரை கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே வாரியார்ஸ் அணிக்கு எதிராக எட்டியிருந்தது. அதே போட்டியில் கிறிஸ் கெயில் 175 ரன்கள் அடித்து சாதனை புரிந்திருந்தார். கிறிஸ் கெயிலின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை பத்து ஆண்டுகளால் இன்னும் யாராலும் முறியடிக்கக் கூட முடியவில்லை.
இந்த போட்டியில் புனே அணியின் பந்து வீச்சாளர் அனைவரும் ரன்களை வாரி கொடுக்க புவனேஸ்வர் குமார் நான்கு ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். மற்ற அனைவரின் ஓவருமே இந்த போட்டியில் எடுபடாமல் போனதால் தான் 263 ரன்களை ஆர்சிபி அடித்திருந்தது .அப்படி ஒரு பந்து வீச்சாளராக இருந்த புவனேஸ்வர் குமார் நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளிலேயே ஒரு மோசமான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக இந்த சீசனில் 51 ரன்கள் கொடுத்திருந்த புவனேஸ்வர் குமார், மும்பை அணிக்கு எதிராக 53 ரன்களும், ஆர்சிபி அணிக்கு எதிராக 60 ரன்களும் அள்ளி வழங்கி உள்ளார். இந்த மூன்று போட்டிகளில் ஒரு விக்கெட் கூட புவனேஸ்வர் குமார் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் ஒரு ஐபிஎல் சீசனில் மூன்று முறை 50 க்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முதல் ஆளாக இடம்பிடித்துள்ளார் புவனேஸ்வர் குமார்.