நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் வெளியேறிய போதிலும் அவர்களை விட கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள அணி என்றால் நிச்சயம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தான். கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.
எந்த ஐசிசி தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக அனைவரது பார்வையும் பாகிஸ்தான் அணியின் மீது அதிகமாக இருக்கும். அந்த அணியில் சர்வதேச தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதனால், அவர்கள் நிச்சயம் இறுதிப்போட்டியில் முன்னேறுவார்கள் என்றும் பலர் கணிக்கின்றனர்.
ஆனால் ஒரு சில ஐசிசி தொடர்களால் அவை கை கூடாமல் பாகிஸ்தானுக்கு இருக்கும் நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் களமிறங்கி இருந்தனர். இந்த முறையும் அமெரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்து தங்களின் சூப்பர் 8 வாய்ப்பை இழந்த பாகிஸ்தான அணி லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.
கடந்த ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசாமை மாற்றிவிட்டு புதிய டி20 கேப்டனாக ஷாஹீன் அப்ரிடியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் நியமித்திருந்தது. ஆனால் நடுவே என்ன குழப்பம் நடந்ததோ தெரியவில்லை மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக மாற அதுவும் தற்போது கை கூடாமல் போய்விட்டது.
கேப்டன்சியில் கடுமையாக சொதப்பியுள்ள பாபர் அசாம், பேட்டிங்கிலும் திணறித்தான் வருகிறார். இந்த தொடரில் 4 போட்டிகளில் பேட்டிங் செய்திருந்த அவர், ஒரு சில முறை 30 ரன்களைக் கடந்திருந்த போதிலும் ஸ்ட்ரைக் ரேட் மிக மிக குறைவாக இருந்தது. ஒரு நாள் போட்டியில் ஆடுவது போல டி20 போட்டிகளில் ஆடுவதையே பெரிய விமர்சனமாக பாபர் அசாமை சுற்றி பார்க்கப்பட்டு வரும் நிலையில், இனிவரும் தொடர்களில் அவரது கேப்டன்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பெரிய அளவில் கேள்விகளை தான் எழுப்பி உள்ளது.
அப்படி ஒரு சூழலில் தான் கடந்த நான்கு டி20 தொடர்களாக பாபர் அசாமிற்கு கிடைக்காமல் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி பார்க்கலாம். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை, 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை என மொத்தம் நான்கு டி20 ஐசிசி தொடர்களில் 23 போட்டிகளில் பாபர் அசாம் ஆடி உள்ளார். ஆனால் இந்த 23 போட்டிகளில் ஒரு முறை கூட அவர் ஆட்டநாயகன் விருதை வென்றதில்லை.
கோலி, ரோஹித்துக்கு நிகராக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் வீரராக பார்க்கப்படும் பாபர் அசாம் இப்படி ஒரு மோசமான சாதனையுடன் விளங்குவது தான் அவரது ரசிகர்களையும் ஏக்கமடைய வைத்துள்ளது.