ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில் பல்வேறு சிறப்பான சாதனைகள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. பட்லர் தனது சதத்தின் மூலம் வெற்றியே பெற முடியாது என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் அணியை தலை நிமிரச் செய்து வெற்றியையும் பெற வைத்திருந்தார்.
கொல்கத்தாவின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், கவுதம் கம்பீர் உள்ளிட்ட அனைவருமே ஒரு நொடி என்ன நடந்தது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போக நம்ப முடியாத ஒரு ஆட்டத்தை ஆடி ஐபிஎல்லில் சிறந்த இன்னிங்ஸ் என்ற பெயரையும் எடுத்திருந்தார் ஜோஸ் பட்லர்.
இதனிடையே இந்த போட்டியில் மற்றொரு சிறப்பான சம்பவமும் அரங்கேறி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 223 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வரும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், தனது டி 20 போட்டி வரலாற்றிலேயே முதல் சதம் அடித்து அசத்தி இருந்தார்.
மேலும் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கி இருந்த பிலிப் சால்ட், ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவுட் ஆகி இருந்தார். அதுவும் ஆவேஷ் கான் வீசிய பந்து நேராக அவரைப் பார்த்து போக, மிக சிறப்பாக டைவ் அடித்து அதனை ஒற்றைக் கையில் பிடித்து நம்ப முடியாத ஒரு கேட்ச் ஆகவும் அதனை மாற்றி இருந்தார். மைதானத்தில் இருந்த அனைவரையும் இந்த கேட்ச் பிரமிப்படைய வைத்திருந்தது.
அந்த கேட்சை அவர் எடுத்ததும் உடனடியாக கீப்பர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் கையில் இருந்த கிளவுஸை வாங்கி தான் கையில் போட்டு, பந்தை பிடித்தபடி டிரெஸ்ஸிங் ரூம்மை நோக்கி உயர்த்தி காட்டி இருந்தார். அவர் வேடிக்கையாக செய்த இந்த சம்பவம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம்.
ராஜஸ்தான் அணி இதற்கு முந்தைய போட்டியில் ஆடிய போது சாம்சன் கிளவுஸ் அணிந்து கொண்டு எளிதாக பிடிக்க போன கேட்ச்களை ஆவேஷ் கான் உள்ளிட்ட ஒரு சில வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடி வந்து அவர் அருகே வந்து எடுத்திருந்தனர். இந்த போட்டிக்கு பின் பேசியிருந்த சஞ்சு சாம்சன், தன் கையில் கிளவுஸ் இருப்பதால் கேட்ச் எடுக்க எளிதாக இருக்கும் என்றும், இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிதாக அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நான் அந்த கேட்சை எடுத்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
அப்படி இருக்கையில் தான் சஞ்சு சாம்சனின் கருத்துக்கு மறைமுகமாக கிண்டல் செய்வது போன்ற ஒரு செய்லை ஆவேஷ் கான் தன்னிடம் க்ளவுஸ் இருப்பதாக உயர்த்தி காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.