டெஸ்ட் கிரிக்கெட் என வந்து விட்டால் ஒரு போட்டி முடிய ஐந்து நாட்கள் இருப்பதால் அனைத்து அணிகளுமே மிக நிதானமாக தான் ரன் சேர்ப்பார்கள். ஒருவேளை அவர்கள் டி20 அல்லது ஒரு நாள் போட்டிகளைப் போல அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து விட்டால் உடனடியாக அவுட்டாகி தங்களின் அணிக்கு நெருக்கடியை உருவாக்கும் சூழலும் வரும்.
இதனால் முடிந்த வரையிலும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தாலே டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை பெற முடியும் என்பதால் பல வீரர்கள் அந்த வழியை தான் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அதே வேளையில் சில வீரர்கள் இதையெல்லாம் தாண்டி டெஸ்ட் போட்டிகளில் கூட அவர்கள் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து வரும் வழக்கமும் உண்டு. சேவாக், டிவில்லியர்ஸ் உள்ளிட்ட ஒரு சில வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் கூட டி20 போல அதிரடியாக சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் செய்த முக்கியமான சாதனை ஒன்று தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. கான்பூர் மைதானத்தில் தற்போது நடந்து வரும் டெஸ்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தாகி இருந்தது.
இதனால் நான்காவது நாளில் இருந்து வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடர்நது ஆட அவர்கள் 233 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து தங்களின் முதலில் ஆடத் தொடங்கிய இந்திய அணி மூன்று ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் சேர்த்து முக்கியமான சாதனையையும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் படைத்திருந்தது.
ஆனால் அதே வேளையில், கேப்டன் ரோஹித் ஷர்மா 11 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு ஃபோருடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். அவர் அவுட்டானாலும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் செய்த முக்கியமான ஒரு சாதனை ஒன்றை தற்போது பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளிலேயே சிக்ஸர்கள் அடித்து அபூர்வ சாதனையை ஒரு சிலர்தான் நிகழ்த்தியுள்ளனர்.
கடந்த 1948 ஆம் ஆண்டு போப்பி வில்லியம்ஸ் என்ற வீரர் இதனை செய்திருந்த நிலையில், இதன் பின்னர் இந்திய அணிையின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பவுலரான உமேஷ் யாதவ் ஆகியோர் தான் டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது இந்திய வீரராக ரோஹித் ஷர்மாவும் டெஸ்டில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.