தனக்கு கிடைத்த ஆட்டநாயகி விருதை தனது சக வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அற்புதமான சதம் அடித்து ஆட்ட நாயகி விருதை வென்றார். கவுர் 84 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, இந்தியா 318 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட உதவினார். இதற்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த வரலாற்று சாதனைக்கு காரணமான கிராந்தி கௌட் கவுர் தனது இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் அடித்து, இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இந்த வரலாற்று சாதனையில், வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட் முக்கிய பங்காற்றினார். பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட அவர், 9.5 ஓவர்களில் 52 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களை பதிவு செய்து, இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
இந்த நிலையில் ஆட்டநாயகி பரிசளிப்பு விழாவின் முடிவில், ஹர்மன்பிரீத் கவுர் ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். தனது ஆட்ட நாயகி விருதை இளம் அணி வீரர் கிராந்தியுடன் பகிர்ந்து கொள்ள போவதாக அறிவித்தார். கிராந்தியை புகழ்ந்து பேசிய கவுர், பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில், “எனது ஆட்ட நாயகி விருதை நான் கிராந்தியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் அவர் தனது வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றை வீசினார். ஒரு பந்து வீச்சாளருக்கு இது ஒரு சிறந்த சாதனை. உங்களை போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளருக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டிருந்தோம். நன்றாக செய்தாய் கிராந்தி, நீ அதற்குத் தகுதியானவள்” என்று கூறினார். அவர் பேசியதை கேட்டதும் கிராந்தி ஆச்சரியத்தில் மூழ்கி ஆனந்தக்கண்ணீர் வடித்தார். இந்த வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்த நெகிழ்ச்சியான வீடியோ இதோ:
https://x.com/BCCIWomen/status/1947864837029302682
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
