யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலா

By Staff

Published:

726e1ecbd5f60f3817e0369f7de0e64e-1

நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு, `நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. `ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு உண்டு. பொதுவாக சனிபகவானை, விக்கிரக வடிவத்தில் நாம் பல கோயில்களில் தரிசித்திருப்போம். ஆனால், யந்திர வடிவத்தில் சனீஸ்வர பகவான் அருள்புரியும் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலிருக்கும் ஏரிக்குப்பம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது.

70124ff655425a39d2f8a007a4f39605

உயரமான கல்லில், யந்திர வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த சனீஸ்வரர், சித்தர்களால் வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐந்தரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட கல்லில் கிழக்கு நோக்கிக் காட்சிதருகிறார் யந்திர வடிவ சனீஸ்வரர். பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்ட யந்திரத்தின் மேல் இடப்புறம் சூரியனும், வலப்புறம் சந்திரனும் இரண்டுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகமும் காணப்படுகின்றன. அதற்குக் கீழே அறுகோண வடிவத்தில் மந்திர அட்சரங்கள் கொண்ட யந்திரம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது. அடுத்து லட்சுமி கடாட்ச யந்திரமும், நீர் – நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் காணப்படுகிறது. அறுகோண யந்திரத்திலுள்ள மந்திர அட்சரங்கள் இடவலமாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடியை முன்னால் வைத்துப் பார்த்தால்தான் அந்த மந்திர அட்சரங்களை நம்மால் வாசிக்க முடியும். அவ்வளவு நுணுக்கமாக இந்த யந்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

திருநள்ளாறைப்போலவே இங்கும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கியே காட்சி தருகிறார். ஏழரைச் சனி, அட்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி ஆகியவற்றால் பாதிக்கப்படும் அன்பர்களின் துன்பங்களை யந்திர வடிவ சனீஸ்வரர் போக்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.

eef3d6bcd1764b4f75132dc1f11a6d3b

தல வரலாறு..

கி.பி.1535-ம் வருடம் நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரி, குதிரை மீதேறி இந்த ஊரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது குதிரையிலிருந்து விழுந்த வையாபுரிக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குதிரைக்கும் அதிகக் காயம். வையாபுரியின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்திலிருந்த மக்கள் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள். அப்போது அவர்களில் ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, “இந்த இடத்தில் சனிபகவானுக்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டால், வையாபுரியின் கால் சரியாகிவிடும்” என்று கூறினாள். வையாபுரியும் சனீஸ்வர பகவானுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். வேறெங்கும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான முறையில் சனீஸ்வரருக்கு ஆலயம் கட்ட நினைத்த வையாபுரி, சித்தர்கள் மற்றும் வேத விற்பன்னர்களுடன் ஆலோசித்து, மந்திர அட்சரங்களால் ஆன யந்திர சனீஸ்வரரை வடிவமைத்து, கோயில் கட்டி, பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து பூஜைகள் நடைபெறவும் வழிவகை செய்தார். வையாபுரியின் உடல்நலம் மீண்டது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் வழிபடப்படாமல் புதர் மண்டிப்போன கோயில் சில வருடங்களுக்கு முன்னர்தான் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் கண்டறியப்பட்டது. பின்னர் தொல்லியல் துறையினர் இந்த இடத்துக்கு வந்து ஆய்வு செய்தபோதுதான், நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரியின் வரலாறு தெரிய வந்தது. பிறகு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோயிலைப் புதுப்பித்து நித்திய பூஜைகளுக்கு வழிசெய்தனர்.

உலகத்தையே ஆட்டி படைக்கும் சனிபகவான் சிறந்த சிவ பக்தர். இருந்தாலும் விஷ்ணுவையும் வணங்குபவர், சனிபகவானுக்கு குழந்தை இல்லை. அதனால அவர் மனைவி தேஜஸ்வி மிகுந்த மனவேதனையில் இருந்தாள். ஒருமுறை சனிபகவான், பெருமாளை நோக்கி தவமிருந்த வேளையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சனிபகவானை நெருங்கி அவர் எதிரில் காத்திருந்தாள். தவத்திலிருந்த சனிபகவான் அவள் காத்திருப்பை உணராததால், கோவங்கொண்டு, உன் பார்வை நேரடியாக யார்மீது பட்டாலும் அவர்கள் உருப்படாமல் போவார்கள் என சபித்து சென்றாள். அதனால், அன்றிலிருந்து, கீழ்ப்பார்வை குனிந்த தலை நிமிராமல் இருப்பார். அவருக்கு உதவும் பொருட்டு அவர் அருகிலேயே  அவரின் அன்னை சாயாதேவி எந்திர வடிவில் தரையில் புதைக்கப்பட்டு  மகனுக்கு அருள்பாலிக்கிறார்.  அம்மா பக்கத்திலிருந்தா எல்லாரும் கப்சிப்ன்னு இருக்குற மாதிரி இங்க சனிபகவானும் அமைதியா சாந்தமா இருக்கார்.  சனிபகவான், யந்திர வடிவில் அதும் கல்லால் ஆன யந்திரத்தில் அருள்பாலிக்க காரணம், கல் எதுக்கும் அசைந்துக்கொடுக்காது. அதுமாதிரி உறுதியாக சனிபகவான் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்ன்னும்,    ” நேத்திரத்தைக் காகம்போல் நிச்சயமாய்க் காக்க, ஆத்துமத்தில் ஆனந்தமாய் “ என்ற ஔவையாரின் வாக்கிற்கேற்ப,   இரு பக்கங்களிலும் சூரிய சந்திரர்களை வைத்து நடுவில் காகத்தை வைத்திருக்கிறார்கள். சூரியனாகிய வலதுவிழி நாட்டத்தையும், சந்திரனாகிய இடதுவிழி நாட்டத்தையும் புருவ மத்தியாகிய முத்தித் தலத்தில் வைக்க (காகம் பார்ப்பதைப் போல் ஒரு மனநிலையில்) ஆறுமுகப்பட்டையான ஸ்ரீமுருகப்பெருமான் ஜோதி  தரிசனம் கிடைத்திடும். இந்த ஆறாவது அவதாரத்தைத் தாண்டி ஏழாவது ஆதாரத்திற்கு சென்றால், சிவனைத் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து வழியும் யோக -சோம பானத்தை இந்திரன்போல அனுபவித்து மகிழலாம். இதன்மூலம் ஸ்ரீஆஞ்சனேயர்போல் நம் உடலை கல்போல காயகற்பம் செய்து காயசித்திக்கான வழியைப் பெற பரிபாஷையாக இந்த யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழிபட்டிருக்காங்க.

0517b52ef544b47a4e48558fb31dd411

திருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர். எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர். 9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.  பக்தகோடிகள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாஸ்கர தீர்த்தம் நளன் தீர்த்தத்துக்கு ஒப்பானது.

87a3b475cdc0ed521579ecfa4d03fd22

சனி பகவானை சந்தோஷப்படுத்த,  சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், எண்ணெய் தானம் செய்தல்,  எள் தானம், நீல நிற வஸ்திர தானம், சனி பகவானுக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்தல், தர்மசாஸ்த்தா ஐயப்பனை  வழிபடுதல் , ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம  பாராயணம் செய்தல், ராமாயண பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், அரச மரத்தை வலம் வருதல்,  ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் என லிஸ்ட் நீள்கிறது.  இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்  என சனி பகவான் சத்தியம் செய்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. இங்கு துலாபாரம் செலுத்தும் வழக்கமும் உண்டு. குழந்தை வரம் வேண்டி, நிறைவேறியவர்கள்  நெல், சர்க்கரை, பணம்ன்னு அவரவர் வசதிப்படி வேண்டிக்கொண்டு இங்கு துலாப்பாரம் இடுகிறார்கள். பொதுவா சனிபகவான் கோவிலில் நேருக்கு நேர் நின்னு கும்பிட மாட்டார்கள். அதேமாதிரி கோவில் பிரசாதமான விபூதி, குங்குமம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போக பயப்படுவாங்க. ஆனா, இங்க அப்படி பயப்பட தேவையில்லை. காரணம் இறைவன் இங்கு யந்திர வடிவில் இருப்பதால்தான். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. திருவண்ணாமலை வழியா திருவண்ணாமலை டூ வேலூர் அல்லது போளூர் போகும் பேருந்தில் ஏறி, சந்தைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் இக்கோவிலுக்கு போகலாம். அதேப்போல வேலூரிலிருந்து வருபவர்கள், வேலூர் டூ திருவண்ணாமலை, படைவேடு செல்லும் பஸ்சில் ஏறி சந்தைவாசலில் இறங்கி வரலாம். சென்னைல இருந்து வருபவர்கள், ஆரணி வந்து அங்கிருந்து நேரடிப்பேருந்து அல்லது. வண்டி, ஆட்டோ, போகலாம்…

எந்திரவடிவில் இருக்கும் சனீஸ்வரனை வணங்கி சனிபகவான் அருளை பெறுவோம்.

Leave a Comment