சிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன

By Staff

Published:

339b3f245e03334dfdbd4aef1b61d2f0

பலர் சிவன் சொத்து குல நாசம் என்று ஆன்றோர்கள் கூறிவந்த கூற்றை தவறுதலாகப் புரிந்து கொண்டு

சிவன் கோவிலில் இருந்து மட்டும் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் தவறுதலாகக் கொண்டுவரக் கூடாது என்று பொருள் கொள்கின்றனர்.

அப்படியென்றால் மற்ற இடங்களில் இருந்து தவறாகக் கொண்டுவரலாமா ? என்ற கேள்வி எழுகிறது.

சிவன் இல்லாத இடம் எது ? அனைத்தும் சிவமயம் என்று அறிவோம்.

ஆகவே நமக்குச் சொந்தமான பொருளைத் தவிர மற்றவருக்குச் சொந்தமானபொருளை எங்கு எப்படி எடுத்தாலும் பாவம் பின்தொடரும்.

உதாரணமாக பிறர் நமக்கு தவறுதலாக அதிகமாக பணம் கொடுத்து விட்டால் திருப்பிக் கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

சில பொருள்களை கவனிக்காமல் விலை போடாமல் நமக்கு கொடுத்துவிட்டால் கூட

அது நமக்குத் தெரிந்தவுடனேயே அதற்கான விலையைக் கொடுத்துவிடுவதில் கவனமாக இருங்கள்.

காலன் கூட தனக்கு சொந்தமான உயிரை மட்டுமே பறித்துக்கொண்டு உடலை விட்டு விடுகிறான்.

ஆகவே நாமும் நமக்கு சொந்தமாகாதவற்றை அனுபவிக்க ஒருபோதும் இடம் கொடுக்க வேண்டாம்.

அதாவது, சிவன் சொத்து என்பது ஆலயத்தை மட்டும் குறிக்காது.

அது இவ்வுலகத்தையே குறிக்கும்.

இவ்வுலக வாசனைகளால், ஆனந்தம் எப்போது அகப்படாது என்பதே ஆழ்கருத்தாகும்.

உலக வாசனைகளை துறப்பது எளிதன்று, ஆனாலும் முடியாததும் அன்று.

ஆசைகளை மறுக்கக்கூடாது, ஆசைகளை அவை உதிக்கும் இடத்திலேயே வேரருக்கவேண்டும்.

அதற்கு முதற்படி,

“என்னிடம் எல்லாம் உள்ளது என்று நம்பத்தொடங்குங்கள்”.

எல்லாமே, என்னிடம் இருக்கும்போது எனக்கு ஆசைகள் கிடையாதல்லவா?

அடுத்தப்படியாக, “நானே எல்லாம், எல்லாவுமே நான் தான்” என்று உணருங்கள்.

அமைதி பிறக்கும், ஆனந்தம் நிலைக்கும்.

இதை ஒரு சிறிய கதை மூலம் விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பச்சமுத்து என்ற பெயரில் தினக்கூலி செய்யும் ஐயனார் பக்தன் ஒருவன் இருந்தான்.

அவனை வறுமை எனும் நோய் மிகவும் வாட்டியது. ஒருநாள் எப்போதும் போல ஒரு வீட்டுக்கு வேலை செய்ய அவன் ஒப்புக் கொண்டான்.

அதன் பொருட்டு பத்து ரூபாய் கூலியும் பேசிவிட்டு வந்தான். மறுநாள் ஒரு இருண்ட தோப்பின் வழியே வேலைக்குப் புறப்பட்டான்.

அந்த தோப்பின் நடுவே ஒரு ஐயனார் சிலை. பச்சமுத்து தினமும் அவ்வழியே செல்லும்போது ஐயனாரை வணங்குவது வழக்கம்.

அன்றும் அவ்விடம் வந்தவுடன் பச்சமுத்து சாமி கும்பிட்டான்.

திடீரென்று ” பச்சமுத்து, இங்கே வா ” என்று ஐயனார் அழைத்தார்.

பச்சமுத்து பயம் கலந்த மகிழ்ச்சியுடன் அருகில் சென்றான்.

உடனே ஐயனார் ” பக்தா, நீ பயப்படவேண்டாம்,

நீ நிற்கும் இடத்தில் தோண்டிப்பார்,

இரு மண் பானை இருக்கும்,

அதில் தங்கக் காசுகள் இருக்கும்,

அவை உனக்குத்தான்,

ஆனால் பானையைக் சுத்தமாகக் காலி செய்யாதே,

அதில் நாலு தங்கக் காசுகளைப் போட்டு வை ” என்றார்.

பச்சமுத்துவும் அவ்வாறே தோண்டி,

தங்கக் காசுகள் நிறைந்த ஒரு மண் பானையை எடுத்தான்,

வேண்டா வெறுப்பாக அதில் நாலு தங்கக் காசுகளைப் போட்டு வைத்துவிட்டு மீதியை தன் மேல் துண்டில் கட்டிக்கொண்டு, ஐயனாருக்கு நன்றி சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான்.

வேலை செய்ய வேண்டிய வீட்டை அடைந்த பச்சமுத்து தலையில் இருந்த மூட்டையை உத்தரத்தில் கட்டி தொங்கவிட்டான்.

இனி இத் தொழிலிற்கு முழுக்குப் போட்டுவிட்டு உல்லாச வாழ்க்கைவாழ வேண்டியதுதான் என்று கற்பனையில் மிதந்தான்.

அந்த வீட்டுப் பெண்மணி சமையல் செய்ய ஆரம்பித்தாள், குடுவையில் துவரம்பருப்பு காலி, கடைக்குச் சென்று வாங்கி வர சோம்பேறித்தனம்,

உடனே ” பச்சமுத்து, உத்தரத்தில் தொங்கும் மூட்டையில் என்ன இருக்கிறது ? ” என்று கேட்டாள்.

அவனே வீட்டிற்கு துவரம்பருப்பு வாங்கிப் போகிறேன் என்று பொய் சொன்னான்.

உடனே அவசரத்திற்கு நல்லதாயிற்று என்று நினைத்த அவ்வீட்டுக்காரி மூட்டையைப் பிரித்தாள்.

ஆஹா, என்ன பேரானந்தம், நான் வணங்கும் தெய்வம் என்னைக் கைவிடவில்லை. கொத்தனார் கண்ணிற்கு துவரம்பருப்பாகத் தெரிவது என் கண்ணிற்கு தங்கக் காசுகளாகத் தெரிகிறது.

சரி என்று தீர்மானித்து அனைத்தையும் உள்ளே ஒரு இடத்தில் பதுக்கி வைத்து விட்டு அருகில் உள்ள மளிகைக் கடையில் அதே அளவிற்குதுவரம் பருப்பை வாங்கி மூட்டை கட்டி தொங்க விட்டாள்.

மாலையில் வேலை முடிந்தவுடன் மூட்டையைப் பிரித்த பச்சமுத்துவிற்கு தலையில் இடி, மூட்டையில் அத்தனையும் துவரம் பருப்பு.

உடனே வீட்டுக்காரப் பெண்மணியிடம்

” இந்த மூட்டையில் தங்கக் காசுகள் வைத்திருந்தேன் அவை எங்கே ? ” என்று கேட்டான்.

அதற்கு அவள் ” என்னது தங்கமா ? என்ன உளறுகிறாய் ஏதாவது கனவு கண்டாயா ? ” என்றாள்.

விடயம் பஞ்சாயத்திற்குப் போனது, பஞ்சாயத்தாரும் பெண்மணியிடம் வினவ அவளோ

” அவன் தங்கக் காசுகள் வைத்திருந்தால் என் வீட்டிற்கு வேலைக்கு அதுவும் பத்து ரூபாய் கூலிக்கு ஏன் வரவேண்டும் ? ” என்று ஒரு போடு போட்டள்.

பஞ்சாயத்தாரும் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

பச்சமுத்து நேராக ஐயனார் சிலை இருக்கும் இடம் சென்று

” ஐயனாரப்பா, உன் பக்தனை இப்படி நீ மோசம் செய்யலாமா ? ” எனக் கதறி அழுதான்.

அதற்கு ஐயனார் ” யார் யாருக்கு என்னென்ன எப்போது கிடைக்க வேண்டுமோ அப்படியே ஏற்பாடு செய்தேன்.

நீ போன பிறப்பில் அப்பெண்ணின் தங்கக் காசுகளை திருடிவிட்டாய் அதனால் இப்பிறப்பில் நீயே அதை அவளிடம் சேர்க்கும் படி செய்தேன்,

உன் பாவம் கழிந்தது. அத்ற்குக் கூலியாய் நீயே நாலு தங்கக் காசுகளை உன் பானையில் போட்டு வைத்தாயே அதை எடுத்துச் செல் ” என்றார்.

இதைக்கேட்ட பச்சமுத்து, வேண்டா வெறுப்பாக நாம் போட்ட அந்த நாலு காசுகள்தான் இப்போது நமக்கு உரிய சொத்தாகிறது.

நம் பேராசையால் பெரும் சொத்தை விட்டுவிட்டோமே என நினைத்து தன்னை ஆறுதல் செய்துகொண்டான்.

நாம் எதையாவது திருடித்தான் ஆகவேண்டும் என்றால் முன்னால் பிரதமர் நேரு அவர்களைப் போல திருடலாம்.

அவர் ஒருதரம் நிருபர்களிடத்திலே கூறும்போது, ” அதாவது நான் என்னுடை நேரத்தைத் திருடிக்கொண்டிருக்கிறேன் என்றாராம்.

அலுவல்கள் அதிகமான காரணத்தினால் உறங்குவதற்கான நேரத்தை படிப்பதிலும், முக்கியமான கோப்புகளைப் பார்ப்பதிலும் செலவிட்டாராம்.

அவர் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேல் உறங்குவதில்லை.

நாமும் திருடுவதாயிருந்தால் வருடத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது, மகா சிவராத்திரி அன்றும் வைகுண்ட ஏகாதசி என்றும் அவ்வாறு செய்யப் பழக்கப்படுத்திக் கொள்வோம்.

சும்மா விழித்திருந்து அரட்டை அடிப்பதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ கூடாது.

இறைவன் திருநாமங்களை பாராயணம் செய்யலாம், இறைவன் திருநாமங்களை எழுதலாம் அல்லது குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லித்தரலாம்.

இப்படிச் செய்து படிப்படியாக நம்மை நல்வழிப்படுத்திக் கொள்ளலாம்.

சிவாயநம ,,,

Leave a Comment