கேதார கௌரி விரதம் என்பது ஆண்டுதோறும் தீபாவளி நன்னாளில் வருகிறது. அம்பிகை சிவனின் உடலில் பாதியைப் பெறுவதற்காக செய்த தவம் இது. இந்த உலகில் யார் இந்த விரதத்தை இருந்தாலும் அவர்கள் விரும்பியதைப் பெற வேண்டும் என்றும் அம்பாள் சிவனிடம் கேட்டுக் கொண்டார். சிவனும் அதற்கு செவிசாய்த்தார்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 25.10.2022 அன்று வருகிறது. மதியம் 2.28 மணி முதல் மாலை 6.32 வரை உள்ளது. மாலை 4.30 மணியிலிருந்து இதன் உச்ச நேரம் தொடங்குகிறது. இந்த நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது.
ஆலயங்கள் நடை சாத்தப்படும். சூரியகிரகணம் என்பதால் இந்த நேரங்களில் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. எளிய முறையில் வீட்டில் இருந்தே மந்திரங்களை உச்சரித்து வழிபடலாம். அல்லது பொதுவாக இறைவனை வழிபடலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த நேரத்தில் தூங்குவது அவரவர் சவுகரியத்தைப் பொறுத்தது. அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றால் தூங்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ள உணவுப்பொருள்களை மிச்சம் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மீதமுள்ள பால், தயிரில் தர்ப்பை போட்டு வைப்பதற்கு உண்டான ஏற்பாட்டை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள்.
கேதார கௌரி விரதம் என்பது சதுர்த்தசியைக் கணக்கு வைத்து விரதத்தை நிறைவு செய்வது அல்லது அமாவாசையைக் கணக்கு வைத்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
சிவபெருமானை விட்டு என்றும் நீங்காமல் இணைந்தே இருக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை தவம் செய்த காலம். அதன் பலனாக இறைவன் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தை நமக்கு அருளிய காலம். அம்பாள் தவம் மேற்கொண்டதற்காக கௌரி நோன்பு என்றும், கேதார கௌரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
சிவபெருமானின் அஷ்டவிரதங்களில் ஒன்று தான் இந்த கேதார கௌரி விரதம். இதை ஒட்டி தான் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இது முழுவதுமாக சிவபெருமானை வழிபடக்கூடிய அற்புதமான நாள். கேதார கௌரி விரதமும் இந்த நாளில் தான் வருகிறது.
அன்று காலை எழுந்ததும் குளித்து விட்டு மஞ்சள், சந்தனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிள்ளையார் பிடித்து அருகம்புல் சாற்றி வழிபட வேண்டும். 21 வகையான உணவு வகைகள், பழ வகைகள், பட்சணங்கள் வைத்து வழிபடலாம்.
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, சீக்கிரம் கல்யாணம் நடக்க, இல்லறம் இனிதே நடக்க இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. 21 நாள்களுக்கு முன்பாகவே இருக்க ஆரம்பித்தால் நலம். 5 நாளைக்கு முன்பாகவும் இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அதுவும் முடியவில்லை என்றால் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் முடியவில்லையா…23ம் தேதி ஞாயிறன்றும் இந்த விரதத்தை எடுத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாது என்றால் 24ம் தேதி மட்டும் இந்த நோன்பை எடுத்துக் கொள்ளலாம்.
சதுர்த்தசி மற்றும் அமாவாசை அன்று இந்த நோன்பை எடுப்பவர்களும் ஒரே மாதிரியாகத் தான் இந்த நோன்பைக் கொண்டாட வேண்டும். ஏன் என்றால் சூரியகிரகணம் வருவதால். 24ம் தேதி மாலை 5.39 மணி வரை சதுர்த்தசி அமைந்துள்ளது.
அதற்கு பிறகு தான் அமாவாசை ஆரம்பிக்கிறது. அதனால் இந்த விரதத்தை அன்று மாலை 7.30 முதல் 8.30க்குள் கோவிலில் இருந்து கலசம் எடுத்து வருபவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் கலசம் வைத்து பூஜை செய்து நோன்புச்சரடு, நைவேத்தியம் எல்லாம் வைத்து பூஜை செய்து வழிபடலாம். அன்று விரதம் இருக்க ஆரம்பிக்கலாம்.
மறுநாள் 25ம் தேதி காலை எழுந்து நீராடி அதிரசத்துக்கு மாவு சேர்த்து 21 என்று வைக்க வேண்டும். எந்தப் பலகாரம் செய்து வைத்தாலும் 21 ஆக வைக்க வேண்டும். அதிரசம், வடை, சுசியம், முறுக்கு என பலகாரங்கள் செய்து வைக்கலாம்.
அம்பாளுக்குத் தேவையான பூஜைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள். காலை நேரத்திலேயே வழிபாட்டை நிறைவு செய்யுங்க. அம்பாளை உள்ளன்போடு பிரார்த்தனை பண்ணுங்க. பூஜையை முடித்ததும் கணவர் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களின் கையால் நோன்புச்சரடைக் கட்டிக் கொள்ளலாம். 24ம் தேதி மாலை நோன்பைத் துவங்கி 25ம் தேதி மதியத்திற்குள் இந்த நோன்பை நிறைவு செய்து கொள்ளலாம்.
25ம் தேதி காலை 6 மணி முதல் 8.45 வரை செய்யலாம். 7.45 மணி முதல் 8.45 மணி வரை சிறப்பான நேரம். இந்த நேரத்தில் நோன்புச் சரடையும் கட்டிக் கொள்ளலாம். இதை விட்டுவிட்டால் காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை நோன்புச்சரடைக் கட்டிக் கொள்ளலாம்.