தினமும் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். இது உங்கள் பெற்றோருக்கும் கிடைக்கும். ஆசிர்வாதம் என்றாலே தனக்கு எவை ஆசை ஆசையாக நடக்க வேண்டும் என்று நினைப்போமோ அதையே மற்றவர்களுக்கும் கிடைப்பதாக என்று எண்ணி அவர்களை வாழ்த்துவது தான். இதனால் பலன் இருவருக்கும் தான் என்பது போகப் போகவே தெரியும்.
புதிதாக மணமானவர்களைப் பெரியவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று மனமுவந்து ஆசிர்வதிப்பார்கள். 16ம் பெற்று என்றால் பதினாறு குழந்தைகள் அல்ல. பதினாறு வகையான செல்வங்கள் என்று பொருள்.
அதே போல எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் பெரியவர்களிடம் நாம் ஆசிர்வாதம் வாங்கிச் செவ்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். அது நல்ல பழக்கம் தான்.
ஆசிர்வாதம் நாம் ஏன் வாங்க வேண்டும் என்று நாம் தெரிய வேண்டியது அவசியம். அதனால் நமக்கு எத்தகைய பலன்கள் கிட்டுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது. ஆசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல.. ஆசிர்வாதம் செய்வதாலும் நமக்கு சக்தி கிடைக்கிறது. இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு.
நமது எண்ணங்கள் உயர உயர நாம் பக்குவம் அடைகிறோம் என்று பொருள். அதை நாம் வாழ்வில் கண்கூடாக உணர்வோம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆசிர்வாதம் வாங்குபவரும் சரி.
அதைக் கொடுப்பவரும் சரி. எப்போதும் அவர்கள் நல்லதையே நாடுவார்கள். கெட்ட விஷயத்திற்காக யாரும் யாரிடமும் ஆசிர்வாதம் வாங்க மாட்டார்கள். நீ கெட்டுப் போக வேண்டும் என்று யாரும் ஆசிர்வாதமும் செய்ய மாட்டார்கள்.
108 வயது பெரியவரிடம் ஆசி வாங்கினேன்.. தீர்க்காயுசா இருப்பா என்றார் எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்.. அது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார்..அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றே நினைத்தேன்.
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்..அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவதை நாம் பார்த்திருப்போம். இவற்றில் எது சரி என்று பார்த்தால் நம்மை விட வயதில் மூத்தோர்களிடம் யாரிடம் வேண்டுமானாலும் ஆசிர்வாதம் வாங்கலாம். பெரியவர்கள் ஆசி கொடுக்காவிட்டால் தான் தவறு மட்டுமல்ல பாவம் என்று சாஸ்திரமே சொல்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அது இருக்கட்டும். யார் யாருக்கு எப்படி வாழ்த்து சொல்லி ஆசி வழங்க வேண்டும் என்பதையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் காலில் புது மணமக்கள் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும் தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்.
தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள். அவர்களுக்கு மட்டுமல்ல. அவை உங்களுக்கும் கிடைக்கும் என்பது தான் விசேஷம்.
வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது நிதர்சனம்.
மந்திரம், அபிசேகம், ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டும் நாம் செய்ய வேண்டியவை அல்ல. அவை உங்களுக்கும் சேர்த்துதான் என இந்துமதம் மறை பொருளாக உணர்த்தி வருகிறது..
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. நாம் சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..அதனால் எப்போதும் நல்லதையே பேசுங்கள். மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது.
காலில் விழுவதற்குக் கூச்சப்படாதீர்கள். பெரியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும்போது சக்தி அதிகரிக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணருங்கள்.
பெரியோர் மகான்கள் சாதனை புரிந்தோர் மகான்களை சந்தித்தோர் நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆசி பெற வேண்டும். இதன் மூலம் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும் என்பதே உண்மை.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியே தனது தாயிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார் என்றால் அதற்கு எவ்வளவு வலிமை என்று நீங்களே உணருங்கள்.