பெரும்பாலும் வீடுகளில் நாம் துளசி மாடம் வைத்து மகாவிஷ்ணுவைப் பூஜிப்பதற்காக வளர்த்து வருகிறோம். இது ஒருபுறம் ஆன்மீகத்திற்காக வளர்க்கப்பட்டாலும் அடிப்படையில் வீட்டிற்குள் சுத்தமான காற்றை அனுப்புகிறது. மேலும் துளசி மூலிகை மருந்து என்பதாலும் எண்ணற்ற பலன்களைக் கொண்டிருக்கிறது. இப்படி துளசியைக் காட்டிலும் பல மடங்கு பலன்களைத் தரும் அதிசய மரம் தான் வில்வமரம்.
பொதுவாக சிவன் ஆலயங்களில் வில்வமரம் காணப்படும். பெரும்பாலும் வெப்ப மண்டலத்தில் வளரும் இந்த மரமானது ஆசியாக் கண்டத்தில் அதிக அளவு வளர்கிறது. பூக்கள் பன்னீர் வாசனை கொண்டதாகவும் விளங்குகிறது. இதிலிருந்து வில்வ பழம் உருவாகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் வாசம் செய்யும் புனித மரமாக இந்துக்களால் வில்வ மரம் வணங்கப்படுகிறது. வில்வ இலையின் இடப்பாகத்தில் பிரம்மனும், வலப்பாகத்தில் விஷ்ணுவும், நடுவில் சிவனும் வாசம் செய்வதாக ஐதீகம்.
வில்வமரம் சைவ மட்டுமல்லாது வைணவத்திலும் அர்ச்சிக்கப்படுகிறது. எவ்வாறெனில் மகாவிஷ்ணுவின் மார்பினை அலங்கரிக்கும் மகாலட்சுமிக்கு வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. வில்வ இலையினை பூக்களைப் போல் பூஜித்த பின்பு களையாமல் மீண்டும் எடுத்து வைத்து பயன்படுத்தலாம் என ஆன்மீக விதிகள் கூறுகிறது. மேலும் இந்த இலைக்கான ஆற்றல் ஆறுமாதம் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுத்தமான தெய்வ வழிபாட்டுத் தலங்களில் வளரும் வில்வ இலைக்கு ஆற்றல் அதிகம். இதேபோல் துளசியும் பயன்படுத்தலாம்.
கந்த சஷ்டி 5வது நாள்: வேல்வாங்கும் சிங்காரவேலர்… பகை விலகி ஓட இப்படி வழிபடுங்க..!
வில்வ இலையினைக் கொண்டு சிவனை அர்ச்சிப்பதற்கு ஏற்ற காலம் சோமவாரம் தான். மேலும் ஞாயிற்றுகிழமை அர்ச்சனை மிகவும் விஷேசமாக இருக்கும். மேலும் வில்வ மரத்தின் அனைத்துப பாகங்களுமே பயன்தரக்கூடியது. ஹோமத்தில் வில்வ மரப்பட்டைகளை கொண்டு யாகம் செய்து பின் அதனை விபூதியாக எடுத்துப் பயன்படுத்தலாம். இது மருத்துவக் குணம் வாய்ந்தது.
இதுமட்டுமன்றி எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் வில்வ மரம் வளர்ப்பது அஸ்வமேதயாகம் செய்ததற்கான முழுப் பலனும் கிட்டும். துளசியைப் போல் வீட்டில் வில்வமரம் வளர்ப்பவர்களுக்கு சொர்க்கவாசல் நிச்சயம். மேலும் வில்வமரம் வளர்த்து பூஜிப்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. 108 சிவாலயங்களை தரிசித்த பலன், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் என எக்கச்சக்க நன்மைகள் வில்வமரத்தால் உண்டு. மேலும் மகாசிவராத்திரி இரவில் வில்வ இலைகளால் சிவனை பூஜிப்பவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பதும் ஐதீகம்.