அந்தக்காலத்தில் அரசர்கள் போரில் படையெடுப்பதற்கு விஜயதசமி நாளையே தேர்ந்து எடுப்பார்கள். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்பது அவர்களது ஐதீகம்.
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்களது நாடு, ஆட்சி, அதிகாரம் என அனைத்தையும் இழந்து 12 ஆண்டுகள் வனவாசம் இருந்தனர். அதன் பின்னர் அவர்கள் தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றது விஜயதசமி நாளில் தான். அது போல தான் ராமாயணத்திலும் ராமர் இராவணைனை விஜயதசமி அன்று போரில் அழித்து வெற்றி பெற்றார்.
வடமாநிலங்களில் இந்தநாளையே ராம்லீலாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 10 தலை கொண்ட ராவணனின் ராட்சத உருவ பொம்மையை ராமர் வேடம் தரித்தவரால் அம்பு எய்யப்பட்டு அதற்கு தீவைத்து எரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண மக்கள் பெரிய மைதானத்தில் ஆவலோடு திரண்டு விடுவர்.
நவராத்திரியில் அம்பிகை 9 நாள் கொலுவில் இருந்து பத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்த நாளையே விஜயதசமியாகக் கொண்டாடினர்.
தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் குலசை தசரா தான் உலகளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயதசமியன்று துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்த காட்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரில் தான் மகிஷாசுரன் வதம் செய்யப்பட்ட இடம்.
அதனால் அங்கு கொண்டாடப்படும் தசரா முதலிடத்தை வகிக்கிறது. அங்கு இன்றும் தசரா திருவிழாவின் போது யானை ஊர்வலம் நடக்கும். இது மன்னரின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சக்திக்கு 4 வடிவங்கள் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவனைப் போன்றே 5 தொழில்களைச் செய்கிறாள்.
சிவபெருமானின் இடப்பாகத்தில் இவள் ஆட்சி செய்கையில் பவானியாகிறாள். ஆண் தன்மை கொண்டு திகழ்கையில் மகா விஷ்ணுவாகிறாள். உலகையே அச்சுறுத்தும் அசுரர்களை வதம் செய்கையில் காளியாகிறாள். வெற்றி பெற்றதும் அதைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்க்கும்போது துர்காவாகிறாள்.
அதனால் தான் சக்திக்கு 4 வடிவங்கள் என்று சொல்லப்பட்டது. சக்தியானவள் உலகையே அழித்து அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை அழிப்பதற்காக அவதாரம் எடுக்கும் பொருட்டு மும்மூர்த்திகளின் அம்சமாக இருந்து தோன்றியவள் ஆதலால் ஆதிசக்தி என்றும் பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். அதனால் தான் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்.
இந்த உன்னதமான நாளில் அம்பிகையை வழிபட்டு எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் வெற்றி தான். இந்த அற்புதமான நாளில் கலைகள் மற்றும் கல்வியைக் கற்கத் தொடங்குவர். சிறுகுழந்தைகளுக்கு தாம்பூலத்தில் பச்சரியைப் பரப்பி அதன் மேல் எழுத்துப் பயிற்சி கொடுப்பார்கள். இதனை வித்யாரம்பம் என்று சொல்வர்.
எப்படி வழிபடுவது?
10வது நாளான விஜயதசமி அன்று (5.10.2022) சர்க்கரை பொங்கல், அவல், பொரிகடலை, சுண்டல், வெத்தலைப்பாக்கு பழம் வைத்து நைவேத்தியம் பண்ணுங்க. அம்மா 9 நாளும் கொலு வைக்க எனக்கு அருள்புரிஞ்சீங்க. அதே போல அடுத்த ஆண்டும் எனக்கு கொலு வைக்க அருள் தருவாய் அம்மா என வேண்டுங்க.
மற்றவங்க நான் தொட்டது எல்லாம் துலங்க வேண்டும்…வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டும் தாயே என மனதார வேண்டிக்கோங்க.
இன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரையும், 9.15 மணி முதல் 11.45 மணி வரையும், மதியம் 1.30மணிக்கு மேல் மாலை எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்து வழிபடலாம்.
கொலு வைத்தவர்கள் இன்றிலிருந்து 3வது நாளில் அதை ஒவ்வொன்றாக எடுத்து பேப்பரைச் சுற்றி அழகாக பேக்கிங் செய்து பத்திரப்படுத்தலாம். கொலுவை எடுக்கும்போதும் சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் என ஏதாவது ஒரு நைவேத்தியம் வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.