பாடல்..
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்ப
பூத்திகமழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இரும் சுனைநீர் ஆடுஏலோர் எம்பாவாய்.
பொருள்
நம்மைப் பிணித்திருக்கும் பிறவித்துன்பம் நீங்க தில்லைச்சிற்றம்பலத்தில் ஆனந்தக்களிப்பில் நெருப்பை கையில் ஏந்தி ஆடுகின்றான் இறைவன். உலகங்கள் அனைத்தையும் காத்தும், படைத்தும், அழித்தும் அவனே திருவிளையாடல் நடத்துகிறான். அத்தகைய பெருமைமிக்க அவன் புகழைப்பாடி, வளையல்கள் ஒலிக்க, நீண்ட மேகலைகள் ஆரவாரிக்க, அழகிய கூந்தலின் மீது வண்டுகள் இசைபாட, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடி இறைவனின் பொற்பாதங்களைப் போற்றுவோம்.
விளக்கம்…
நம்மை காக்கவே இறைவன் திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்றான். அவனை வணங்கி நலம்பெறுவோமென அமைகிறது இப்பாடல்
திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்…