திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும், கிரிவலமும் தான். இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் கட்டிமுடிக்க 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அங்குள்ள கல்வெட்டுகளே உறுதி செய்கின்றன. இங்கு நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.
தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் என பல மொழிகளில் இவை உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. இவற்றில் 119 கல்வெட்டுகள் ஆலயம் தோன்றிய வரலாற்றைப் பற்றிச் சொல்கின்றன.
24 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மகிழ மரத்தடியில் ஈசன் சுயம்புவாகத் தோன்றியதாக தல புராணம் கூறுகிறது. அதனால் தான் இங்கு தலவிருட்சமாக மகிழ மரம் உள்ளது.
அடி முடி காண முடியாதபடி தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து பெரிய மலையாக மாறினாராம். அப்போது எப்படி இவ்வளவு பெரிய மலைக்கு மாலை போடுவது? அபிஷேகம் செய்வது என பக்தர்கள் கேட்டார்களாம். அதனால் மலையடிவாரத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாகத் தோன்றினாராம்.
முதல் மற்றும் 2ம் நூற்றாண்டுகளில் மகிழமரத்தடியில் சுயம்புலிங்கம் மண்சுவரால் ஆன கோவிலாகத் தான் கட்டப்பட்டு இருந்ததாம். அதன்பிறகு 4ம் நூற்றாண்டில் கருவறை செங்கலால் கட்டப்பட்டதாம். அதன்பிறகு 5ம் நூற்றாண்டில் சின்ன கோவிலாக மாறியது.
6, 7, 8 ம் நூற்றாண்டுகளில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்தலத்தில் வந்து பாடினார்களாம். அப்போது அண்ணாமலையார் செங்கல் கருவறையில் இருந்துள்ளார். கோவிலில் மொத்தமே அந்த ஒரு அறை தான் இருந்ததாம்.
9ம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் செல்வாக்கு அதிகரித்தது. கோவிலில் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்தன. 817ல் முதலாம் ஆதித்ய சோழன் கருங்கல் கருவறையைக் கட்டினார். 10ம் நூற்றாண்டில் அதைச் சுற்றிலும் முதல், 2ம் பிரகாரங்கள் கட்டப்பட்டன.
11ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழுந்தன. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடிமர ரிஷி கோபுரம், சுற்றுச்சுவர்களைக் கட்டினான். 1063ல் வீர ராஜேந்திர சோழன் கிளிக்கோபுரத்தைக் கட்டினான். திருவண்ணாமலை கோவில் கம்பீரத் தோற்றத்துடன் ஜொலித்தது.
12ம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்குத் தனி சன்னதி கட்டினார். 13ம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள் உருவானது.
பல்லராஜா, கோப்பெருஞ்சிங்கன் இவற்றைக் கட்டினர். நகைகளையும் கோவிலுக்காக நன்கொடையாகக் கொடுத்தனர். 14ம் நூற்றாண்டில் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்கள் கட்டப்பட்டன. 15ம் நூற்றாண்டில் பலர் கோவிலுக்குத் தானமாக நிலங்களை எழுதி வைத்தனர்.
16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் மிகப்பெரிய அளவில் ஆலயத்தை மாற்றி அமைத்தார். 20 பெரிய திருப்பணிகளை அவர் தான் செய்தார். 217 அடி உயர கிழக்கு கோபுரம், இந்திர விமானம், ஆயிரம் கால் மண்டபம், சிவகங்கை தீர்த்தக்குளம், விநாயகர் தேர் உள்பட பல திருப்பணிகளைச் செய்தார். உண்ணாமுலை அம்மனுக்குக் கிருஷ்ணராயன் பதக்கம், நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
1529ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590ல் கட்டினார். குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினர். 9 கோபுரங்கள் கொண்டு அழகுமிளிர திருவண்ணாமலை கோவில் காட்சி அளிக்கிறது. கோபுரங்கள் கட்டி முடிக்க மட்டும் 220 ஆண்டுகள் ஆனதாம். கோவிலின் மொத்த கட்டட அமைப்பும் முடிய 1000 ஆண்டுகள் ஆனதாம்.
1903, 1944, 1976 ஆகிய ஆண்டுகளில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தான் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினர். மொத்தத்தில் கிருஷ்ண தேவராயர், பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் தான் கோவிலுக்குப் பல்வேறு திருப்பணிகளைச் செய்தனர். இவர்கள் இருவரும் தான் இன்றும் நாம் கோவில்களை வியந்து பார்க்கும் அளவு கட்டியவர்கள்.
எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்த போதும் அண்ணாமலையாருக்குப் பிடித்தவர் வல்லாள மகாராஜா தான். காரணம் அவர் வாரிசு இல்லாமல் தவித்தார். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது அண்ணாமலையார் இரக்கம் கொண்டார். அதனால் அவரைத் தன் தந்தையாக ஏற்றுக் கொண்டாராம்.
மன்னர் இறந்த போது அவருக்கு அண்ணாமலையார் சார்பில் தான் இறுதிச்சடங்குகள் நடந்ததாம். அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் மாசி மாதம் அண்ணாமலையார் அந்த மன்னருக்குத் திதி கொடுத்து வருகிறார்.