ஈரேழு உலகங்களிலும் மிகவும் உயர்ந்ததாக போற்றப்படுவது நாம்முடைய பூவுலகம்தான். காரணம், சுவர்க்கத்திலோ, பிரம்மலோகத்திலோ இல்லாத சிறப்பு நம்முடைய உலகத்துக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நம்முடைய உலகத்தில்தான் இறைவன் எண்ணற்ற திவ்யதேசங்களில் அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கிறார். புனிதமான நதிகள் யாவும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, எண்ணற்ற மகான்கள் அவதரித்து இந்த மண்ணுக்கு மகிமை சேர்த்திருக்கின்றனர். இந்த புண்ணிய பூமியில்தான் பகவான் நாராயணன் ஶ்ரீகிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் எண்ணற்ற லீலைகளைப் புரிந்து யசோதையையும், கோபிகைகளையும் மகிழ்வித்து இருக்கிறான். அவன்தான் நம்மையெல்லாம் கடைத்தேற்றக்கூடியவன். அவனே நமக்கு மோட்சம் தரக்கூடியவன். வாருங்கள்! அவன் அருளால் அவனை அடைய நாமும் நோன்பு இருப்பதற்குத் தேவையான காரியங்களைச் செய்வோம் என்று அழைக்கிறாள்.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள அரியின் திருவடிகளை எப்போதும் பாடுவோம்.நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதி காலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோனபை கடைப்பிடிப்போம்.
திருப்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்…