நமது அண்டை மாநிலமான ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்திலிருக்கும் காணிப்பாக்கம் என்ற ஊரில் ஸ்ரீவரசித்தி விநாயகர் என்ற பெயர் கொண்டு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விநாயகர் என்றாலே சிறிய கண்கள், பெரிய காது, தொந்தி, தந்தம் இவைதான் நமது நினைவுக்கு வரும். ஆனால், இந்த விநாயகர் இவை எதுமின்றி மொழுக்கென இருப்பார். தேகம் முழுக்கவே பூரித்து கிடப்பார். ள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள்.
பொதுவாய் விநாயகர் என்றாலே மரியாதையும், ஒருவித நெருக்கமும் இருக்கும். ஆனால், இத்தலத்து விநாயகர் என்றாலே பயம் வரும். ஏனென்றால் யாராவது பொய் சொல்கிறார்களோ என சந்தேகத்தால், இந்த கோவிலில் வைத்து சத்தியம் செய்ய சொல்கின்றனர். காரணம், இந்த விநாயகர்முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதே! `காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாகவே இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு மிகவும் விருப்பம். இதற்கு காரணம் கிணற்றுக்குள் இருந்த இவரை வெளிக்கொணர்ந்ததே மூன்று உடல் ஊனமுற்றவர்கள்தான்.
இன்று காணிப்பாக்கம் என அழைக்கப்படும் அன்றைய விஹார புரியில் குருடும், செவிடும், ஊமையுமான மூன்று சகோதரர்கள் வசித்து வந்தனர். ஏழ்மை நிலையிலும் ஒற்றுமையாய் தங்களுக்கு சொந்தமான சிறு நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். ஒரு கோடைக்காலத்தில் அவர்களது நிலத்திலிருந்த கிணற்றில் நீர் வற்றியது. அதனால், கிணற்றினை ஆழப்படுத்த வேண்டி, மூவரும் செயலில் இறங்கினர். ஊமையன் கிணற்றில் இறங்கி தோண்ட, செவிடன் கிணற்று மண்ணை கயிற்றின்மூலம் மேல இழுத்தான். குருடனோ அந்த மண்ணை தூர கொண்டு போய் கொட்டினான்.
கிணற்றை தோண்டும்போது டங்கென சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைப்பார்த்த ஊமையன், ஐயோ! ரத்தம் என அலறினான். அந்த சத்தம் கரையிலிருந்த செவிடன் காதில் விழுந்து அவன் கிணற்றுக்குள் எட்டி பார்த்து ஆமாம்! ரத்தம் என கூவினான். இதைக்கேட்ட குருடன் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்து ஐயோ! ரத்தம் கொப்பளிக்கின்றது என அலறியபடி மூவரும் ஊருக்குள் ஓடி நடந்தை கூறினர். ஊரார் வந்து கிணற்றுக்குல் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் ரத்தம் ஒழுக சுயம்புவாய் காட்சியளிதார். அனைவரும்பயபக்தியுடன் வணங்கினர். (இன்றைக்கும் மண்வெட்டித் தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.) ஊர் பொதுமக்கள் சிறிய அளவில் கோவில் ஒன்றினை எழுப்பி விநாயகரை வணங்கி வந்தனர்.
விநாயகரின் மகிமை பரவ ஆரம்பித்தது. காணி நிலத்தில் தோன்றியதால் காணிப்பாக்கம் என பெயர் ஏற்பட்டதாய் சொல்கிறார்கள். கேணி(கிணறு) தோன்றியதால் கேணிப்பாக்கம் என உண்டாகி, காலப்போக்கில் மருவி காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதெனவும் சொல்கிறார்கள். விநாயகர் வெளிப்பட்ட நேரத்தில் ஊரார் உடைத்த தேங்காயிலிருந்து ஓடிய தேங்காய் தண்ணீர் காணி பரப்பளவில் பரவி தேங்கியதாலும் காணிப்பாக்கம் என இந்த ஊருக்கு பேர் உண்டானது. பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது எனவும் சொல்கிறார்கள்.
மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கு சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது. பாகுதா கோயிலின் அருகில் பாகுதா நதி காணப்படுகிறது.அந்தக் காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான்.வெகுண்ட அரசன், விகிதாவின் இரு கைகளையும் வெட்டிவிட்டான். அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம் விநாயகரை நோக்கி “பாகு தா (கை தா)” என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு `பாகுதா’ என்ற பெயரும் ஏற்பட்டது.
அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், கிணறு மாதிரியான அமைப்பில் சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை எட்டிப் பார்க்கலாம். அந்த கிணற்று நீரே பிரசாதமாய் தருகின்றனர். ஒரு ஸ்பூன் தண்ணீர் பல நோய்களை தீர்ப்பதாய் நம்பிக்கை.
இக்கோவிலுக்கருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை. மற்றது வரதராஜ சுவாமி ஆலயம். ஜனமேஜய அரசன் கனவில் வந்து, பெருமாளே கட்டச் சொன்ன கோயில் இது.
கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் பொருந்தவில்லையாம். அதனால் ஆடம்பர அலங்காரமின்றி வெறும் அங்கவஸ்திரம், மலர்மாலைகளுடன் காட்சி தருகிறார்.
அமைவிடம்: ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சுமார் 10கிமீ தூரத்தில் இருளா தாலுக்காவில் காணிப்பாக்கம் உள்ளது. வேலூரிலிருந்தும் நேரடி பேருந்து உண்டு.
முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்குவோம். வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்!!