இந்த கோவில் ஆனது திருச்சியில் அமைந்துள்ளது. பழமையான பாறையின் உச்சியில் இது அமைந்துள்ளது, எனவே இதற்கு உச்சிபிள்ளையார் கோவில் என பெயர் வந்துள்ளது. இது மலைக்கோட்டை எனும் மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி அடைந்த பின்பு அயோத்தியில் இராமனுக்கு பட்டாபிசேகம் நடந்தது. இதற்க்கு இராவணனின் தம்பியான விபீசணனும் கலந்து கொண்டார். தமக்கு உதவியதற்காக இராமன் விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார்.
இருந்தபோதிலும் விபீசணன் அரக்கன் என்ற காரணத்தினால் தேவர்களுக்கு அந்த செயல் பிடிக்கவில்லை, எனவே தேவர்கள் திட்டமிட்டனர். இரங்கநாதர் சிலையை ஒரு முறை கீழே வைத்துவிட்டால் மீண்டும் சிலையை நகர்த்துவது கடினம். இதனால் விபீசணர் எப்படியாவது சிலையை கீழே வைத்துவிட வேண்டும் என்று விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதை விநாயகரும் ஏற்று கொண்டார்.
விபீசணர் பட்டாபிசேகம் முடிந்து இலங்கை திரும்பிகொண்டு இருந்தார். அவர் திருச்சி வழியே செல்லும் போது அங்கே ஓடும் காவேரி ஆறு அவரை ஈர்த்தது, அவர் அதில் நீராடி செல்ல விரும்பினார்.
அந்த சமயம் சிலையை என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தோணவில்லை, அந்த வேலையில் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனிடம் விபீசணர் சிலையை கொடுத்து அதை தாம் வரும் வரை தரையில் படாமல் வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் நீராடி விட்டு திரும்பும் போது அங்கே இருந்த சிலையை சிறுவன் கீழே வைத்து விட விபீசணர் கடுங்கோபமடைந்தார். கோபம் கொண்ட விபீசணரை கண்ட சிறுவன் பயந்து ஓடினான். சிறுவனை விரட்டிக்கொண்டு விபீசணர் பின்தொடர்ந்தார்.
மலை உச்சியில் சிறுவனை பிடித்து கோபத்தில் அவன் தலையில் கொட்டினார். பின்பு விநாயகர் தன் சுயரூபத்தை வெளிபடுத்தினார், அதன் பிறகு அங்கேயே கோவில் உருவானது. இங்குள்ள விநாயகர் தலையில் ஒரு வீக்கம் உள்ளது.