நாம் வாழும் இவ்வுலகம் பல உயிரினங்களை உள்ளடக்கியது. இந்த உயிரினங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது ஆறறிவு கொண்ட மனித உயிரினம் தான். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பல பாவங்களை செய்து விட்டு இந்த பாவத்தை தொலைப்பதற்கு பல புனித தலங்களுக்கும், கோவில்களுக்கும் செல்வோம். இந்த பாவத்தை நீக்குவதற்கு உகந்த மாதம் மாசி மாதமாகும்.
மாதங்களிலேயே மிகவும் மகத்தான மாதமாக கருதப்படுவது இந்த மாசி மாதம் தான். இந்த மாசி மாதத்தை கடலாடும் மாதம் மற்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் அழைப்பார்கள். இந்த மாதத்தில் தான் பெரும்பாலானோர், தான் செய்த பாவத்தை தொலைப்பதற்கு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை போன்ற நதிகளில் நீராட செல்வார்கள்.
இப்படி இந்த புனித நதிகளில் நீராடினால் தான் செய்த பாவங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இம்மாதத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து தங்களது இஷ்ட தெய்வத்தை வணங்குவார்கள்.
இப்படி செய்தால் தான் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கி குடும்பம் செழிக்கும். மேலும் குடும்பத்தில் துன்பங்களும், பிரச்சினைகளும் மாறி மாறி ஏற்பட்டால் இம்மாத நாட்களில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்வதன் மூலம் இவை அனைத்தும் நீங்கும்.