தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. மார்கழி மாதத்தைப் பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த ஒரு மாதமாகக் இந்து சமய வழிபாட்டில் கருதப்படுகிறது.
அதேபோல் மார்கழி மாதத்திற்கு அடுத்தபடியாக விஷேசமான மாதமாக ஆடிமாதம் கருதப்படுகிறது. ஏனெனில் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் தெய்வத்திற்கு உகந்த மாதமாதலால் அந்த மாதத்தில் மக்கள் எந்த சுப காரியங்களையும் நடத்துவதில்லை.
ஆடி மாதத்தில் அம்மனை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். ஆனால் அனைத்து வழிபாட்டு முறைகளிலும் கட்டாயம் இடம் பெறுவது கூழ். கம்மங் கூழ், கேப்பைக் கூழ் போன்றவற்றைத் தயாரித்து அம்மனுக்குப் படைத்து வழிபடுவர். இப்படி கூழ் ஊற்றும் பழக்கம் எதனால் உருவானது தெரியுமா?
தவங்களில் மிகவும் சிறந்து விளங்கிய முனிவரான ஜமத்கனி முனிவரை பொறாமையின் காரணமாக வீரியார்ச்சுணனின் புதல்வர்கள் கொன்று விடுகின்றனர். இதனை அறிந்த ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகா கணவனின் இறப்புக்குப் பின் உடன்கட்டை ஏற முற்பட அப்போது தீயில் விழும்போது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்படுகிறது. இந்திரன் வருணனாக மாறி உடனே மாமழை பொழிய அந்த தீ அணைந்து விடுகிறது.
ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா…
வெற்றுடலாக இருந்த ரேணுகா அருகில் இருந்த பகுதிக்குச் சென்று அங்கே வேப்பிலைகளைப் பறித்து ஆடையாக அணிகிறாள். மேலும் அருகிலிருந்தவர்கள் அவருக்கு உணவாகச் சில பொருட்களைக் கொடுக்க அவற்றைக் கொண்டு ரேணுகா கூழ் தயாரித்து பசியாறினார். அப்போது அவர் முன் தோன்றிய சிவபெருமான் அம்மை நோய் நீங்க வேப்பிலையும், கூழும் சிறந்த உணவாகும் என்று வரம் அளித்தாராம். இதனை நினைவு கூறும் விதமாகவே ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் காய்ச்சி வழிபடப்படுகிறது.
மேலும் ஆடி மாதம் கோடையை முடிவுக்குக் கொண்டு வந்து வசந்த காலத்தை வரவேற்பதாகும். இக்காலத்தில் அதிக அளவில் காற்று அடிக்கும். எனவே காற்றின் மூலம் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு உடலில் சேரும் கிருமிகளை கட்டுப்படுத்தி அளிக்கும் ஆற்றல் வேப்பிலைக்கும், கேப்பைக் கூழுக்கும் அதிகம் உண்டு. எனவேதான் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் கூழ் ஊற்றப்படுகிறது.
மேலும் ஆடி மாதத்தில் தான் ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடித் தபசு என பல விஷேசங்கள் தொடர்ச்சியாக வருகின்றன.