அனைத்து கடவுள்களுக்கும் முதன்மையான கடவுளாக இருப்பதால் ஈசன் பாதங்களில் தான் அனைத்துமே இறுதியாகச் சரணடைகின்றன. ஈசன் அத்துணை மகிமை வாய்ந்தவர். அதனால் தான் ஈசனை லிங்கமாக வைத்து வழிபடுகிறோம். ஈசனுக்கென சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம் என எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் சங்காபிஷேகம் தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த வழிபாடு செய்தாலும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவாலயங்களில் சங்காபிஷேக வழிபாடு நடைபெறுவது வழக்கம். சங்காபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு தூய வலம்புரி சங்கினை எடுத்து அதில் புனித நீரை எடுத்து அதனை கங்கையாகக் கருதி அதில் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது முக்திப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக சங்காபிஷேகம் ஏன் கார்த்திகை மாதம் வழிபடுகிறோம் என்றால் இந்த மாதத்தில் தான் திருவாண்ணாமலையில் ஜோதி வடிவமாக இறைவன் காட்சி தந்த மாதம். எனவே இந்த மாதத்தில் சோமவாரம் எனப்படும் நாட்களில் சங்காபிஷேகம் செய்து வழிபடுவது சகல பாவங்களையும் நீக்கி விடும். மேலும் அக்னி வடிவில் இருக்கும் இறைவனை குளிர்விக்க கங்கையால் அபிஷேகம் செய்வது நிறைந்த பலனைக் கொடுக்கும்.
கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!
தண்ணீர் மட்டுமல்லாது இளநீர், பால், பன்னீர் என குளிர்ச்சியான பொருள்களைக் கொண்டும் அபிஷேகம் செய்யலாம். நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது போல் சங்காபிஷேகத்தினைக் கண்டாலே அந்தப் புண்ணியம் நமக்கும் சேருமாம். சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்த விரும்பினால் நமது பொருளாதாரத்திற்கு ஏற்றாற் போல் 54, 60, 64, 108, 1008 என்ற எண்ணிக்கையில் வரிசையாக சங்குகளை அடுக்கி அதை பூஜைப் பொருட்களால் அலங்கரித்து பின் புனித நீர் கொண்டு சங்காபிஷேகம் நடத்தப்படும்.
சங்காபிஷேகத்தில் தரிசனம் செய்தோம் என்றால்தீராத பிணிகள் தீரும். ஆயுள் விருத்தி உண்டாகும். தீயசக்திகள் விட்டோடும். கண்திருஷ்டி விலகி ஏற்றம்ஏற்படும். மனம் தூய்மை அடையும். சங்கு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் செல்வ வளம் பெருகும்.
இப்படி பல பலன்கள் சங்காபிஷேக நாளில் ஈசனை தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.