புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருது. அதிவிசேஷமாக இந்த சனிக்கிழமை வழிபாடு எதற்காக என்றால் சனிபகவானின் தொல்லையில் இருந்து விடுபடவும், நாராயணருக்கு உகந்த வழிபாடு, தோஷங்களை விலக்கி எந்தவித கிரகப்பிரச்சனை என்றாலும் நம்மைக் காப்பாற்றும் என்று தான் சக்தி வாய்ந்த வழிபாடாக புரட்டாசி சனிக்கிழமையை பெரியவங்க சொல்லி இருக்காங்க.
புரட்டாசி சனிக்கிமை என்றாலே தளிகை போடுவது தான். வீடு வீடாகச் சென்று ‘கோவிந்த ரட்ச கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா’ன்னு பெருமாளின் நாமத்தைச் சொல்லி அரிசியை சேகரித்து பெருமாளுக்கு உகந்த படையலிட்டு வழிபட்டு அன்னதானம் செய்வது வழக்கம். வீடு வீடாகச் செல்லாமல் தானே தேவையான அரிசியைக் கொண்டு தளிகை இடலாம். இது போன்ற தளிகை இட்டு பெருமாளை வழிபடுவது அற்புதமான நலன்களைப் பெற்றுத் தரும்.
5 வகையான கலவை சாதம். சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது பெரு நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம். மிளகு, சீரகம் போட்ட வடை, கருப்பு அல்லது வெள்ளை சுண்டல். இது தான் நைவேத்தியம். பானகம், துளசி தீர்த்தம், மாவிளக்கு வைக்கலாம்.
5 சாதத்தையும் வைத்து தளிகை போடலாம். அல்லது பெருமாளின் திருவுருவத்தையும் போடலாம். எளிமையாகச் சிலர் சாதம் வைத்து சாம்பார் வைத்தும் தளிகை இடலாம்.
எது முடியுமோ அதைச் செய்யலாம்.நாம் செய்வதை உள்ளன்போடு செய்ய வேண்டும். அப்போது இறைவன் ஏற்றுக் கொள்வார். இந்த ஆண்டு 21ம் தேதி முதல் சனிக்கிழமை, தளிகை, மாவிளக்கு இடலாம். 28ம் தேதி 2ம் சனிக்கிழமை. அன்று ஏகாதசி. துளசி பூஜை செய்யலாம். 5.10.2024 அன்று 3வது சனிக்கிழமை. அன்று நவராத்திரி துவக்கம்.
கிருத்தியை திதி அமைந்தள்ளது. மகாலட்சுமி வழிபாட்டைச் செய்யலாம். 12.10.2024 கடைசியாக 4ம் சனிக்கிழமை. அன்று திருவோண நட்சத்திரம். தளிகை அல்லது மாவிளக்கு போடலாம். தளிகைக்கும், மாவிளக்குக்கும் 2 நாள். சௌகரியப்படி செய்து கொள்ளலாம்.
ஏகாதசி அன்று துளசி பூஜை அதிவிசேஷம். துளசி, நாராயணர் படம், ஏலக்காய், பச்சைக்கற்பூரம் கொஞ்சமாகக் கலந்த துளசி தீர்த்தம் சுவாமிக்குப் பூஜை செய்து, துளசி அர்ச்சனை செய்யலாம். விரதம் உள்ளவர்கள் அந்தத் தீர்த்தத்தைக் குடித்துக் கொள்ளலாம். இது நல்ல பலனைத் தரும்.
கிருத்தியை திதியில் மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது. மாலையில் விளக்கேற்றி, பால், கல்கண்டு சாதம், குங்கும அர்ச்சனை, 108 போற்றிகள் சொல்லி வழிபடலாம். இதுல எது சௌகரியமோ அந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
சத்திய நாராயணர் பூஜையையும் எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அதை இந்த புரட்டாசி மாதத்தில் செய்து கொள்ளலாம். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் செல்லுங்கள். மனதார வழிபட்டு அன்னதானம் செய்யுங்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.