இறைவனை வழிபாடு செய்வதில், பூக்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிறிய பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அப்படி இறைவனுக்கு நெருக்கமான மலர்களை அன்றைக்கு அன்றே பறித்து இறைவனுக்கு சூட்டுவது நன்மை பயக்கும். ஆனால், இது இன்றைய காலக்கட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அதனால் எந்தெந்த பூக்களை பறித்து எத்தனை நாள்வரை பூஜைக்கு உகந்தது என தெரிந்துக்கொள்வோம்.
தாமரை ஏழு நாள்கள், அரளி மூன்று நாள்கள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருடம்வரை வைத்து பூஜிக்கலாம் ஒருமுறை அர்ச்சனை செய்த துளசி, வில்வம், கரு ஊமத்தை, நீலோத்பலம் ஆகியவற்றைப் பொன் மலரைப்போல் கழுவிச் சாற்றலாம் என்று சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது. பறித்தபின் மலர்ந்த பூ, பழம் பூ, எருக்கு மற்றும் ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூ, கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த பூ, கீழே உதிர்ந்த பூ, இடுப்புக்குக் கீழ் உள்ள உறுப்புகளில் பட்ட பூ, புழுகடித்த பூ, சிலந்தி மற்றும் பறவைகள் எச்சமிட்ட பூ, மயிர் பட்ட பூ, இரவில் எடுத்த பூ, நீரில் மூழ்கிய பூ, அசுத்தரால் எடுக்கப்பட்ட பூ முதலானவை பூஜைக்கு ஆகாதவை
இறைவனுக்கு சார்த்திய பூக்களை காலால் மிதிபட விடக்கூடாது. அவற்றை ஓடும் நீரில், அல்லது கிணற்றில் அல்லது கால் படாதவாறு செடி கொடிகளிமீது போட்டுவிடவேண்டும். கோவில்களில் இறைவனுக்கு சாற்றிய மாலைகளை வண்டிகளின் முன்பக்கத்தில், வீட்டின் நிலைவாசல்படியில் கட்டுவர். அது முற்றிலும் தவறான செயலாகும்.