பாடல்
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
விளக்கம்
கங்கை நீர் நிரம்பி, நிமிர்ந்த சிவந்த சடைமுடிமீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!
தேவாரம் பாடலும் விளக்கமும் தொடரும்…