முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய்..
பொருள்:
காலத்தால் முற்பட்ட பழம்பொருள்களுக்கெல்லாம் முற்பட்ட பழம்பொருளாய் நீ இருக்கிறாய். அதைப் போலவே, புதிய பொருள்கள் அனைத்திற்கும் புத்தம்புதுப்பொருளாகவும் நீ திகழ்கின்றாய். உன்னைத் தலைவனாகப் பெற்றதால் நாங்கள் சிறந்த அடியவர்களாய் ஆனோம். உன் தொண்டர்களின் திருவடிகளையே வணங்குவோம், அவர்களுக்கே அன்பர்கள் ஆவோம். அந்தச் சிவனடியார்களையே நாங்கள் கணவராக ஏற்போம். அவர்கள் விரும்பிய வண்ணம் அடிமையாகப் பணி செய்வோம். இந்த நிலையை எங்களுக்கு அருள்வாயானால் எக்குறையுமின்றி நாங்கள் வாழ்வோம்.
விளக்கம்:
பழமையில் பழமையாயும், புதுமையில் புதுமையாயும் விள்ங்கும் ஈசனை இஷ்டதெய்வமாய் ஏற்றுக்கொண்ட பெண்கள், சிறந்த சிவனடியாராய் இருப்பதோடு, தங்களைப்போல இருக்கும் சிறந்த சிவனடியாரையே வணங்குவதும், சிவனடியாரையே கணவராகவும் அடைந்து இறுதிக்காலம்வரை சிவனடியாராவே இருப்போமென சூளுரைப்பதாய் இந்த பாடல் இருக்கு..
திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…