நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும். நவராத்திரியின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான்.
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து மகிஷன் என்னும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும் லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடு, கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனை ஆகியவை கிடைக்கும். சரஸ்வதியை வழிப்பட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.
இந்த மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சி தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.