ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!

By Staff

Published:

சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு ராத்திரி சிவராத்திரி, அதே போல அன்னை பராசக்திக்கு கொண்டாடப்படும் ஒன்பது ராத்திரி நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அடுத்த நாளான பிரதமை முதல் நவமி மாலை வரை நவராத்திரி கொண்டாடப்படுகின்றது.

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒன்று இணைந்து சக்தியாக உருவெடுத்து மகிஷன் என்று அசுரனை அழித்ததே நவராத்திரியாக கொண்டாடப்படுகின்றது. இந்த மூவரும் இணைந்து மகிஷாசுர வர்த்தினி சக்தியாக தோன்றி ஒன்பது இரவுகள் மகிஷன் என்னும் அரக்கனிடம் போரிட்டாள்.

நவராத்திரி

அம்பிகையை பல ரூபங்களில் வழிபடுவதே நவராத்திரி பூஜையாகும். எனவே இந்த ஒன்பது நாட்களிலும் சக்தி வடிவங்களை மூன்றாக பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று தேவிகளையும் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

முதல் மூன்று நாட்களுக்கு மஹாலக்ஷ்மியை வணங்க வேண்டும், அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு துர்க்கையை வணங்க வேண்டும். கடைசி மூன்று நாட்களுக்கு சரஸ்வதியை வணங்க வேண்டும்.

மூன்று மூன்றாக பிரித்து வழிபடுவது ஏன்?

முதல் மூன்று நாட்களுக்கு மஹாலக்ஷ்மியை வழிபட்டால் செல்வம் வளம் கூடும். நமது வாழ்க்கைக்கு தேவையானது செல்வம் மற்றும் பிற வசதிகள். அதனை பெறுவதற்கு மஹாலக்ஷ்மியை முதலில் துதிக்கின்றோம்.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். செல்வம் மட்டுமே வாழ்க்கைக்கு போதுமா, அதனை காத்திட வேண்டாமா, அனாவசிய வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவும், பயனுள்ள விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அன்னையை துதிக்கின்றோம்.

கடைசி மூன்று நாட்களுக்கு கல்வி வளம் சிறக்க சரஸ்வதியை வணங்குகின்றோம்.

நவராத்திரி

நவராத்திரி கொலு அமைக்கும் முறை:

நவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள்.

முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள் புல், செடி, கோடி தாவர பொம்மைகளை வைப்பார்கள்.

இரண்டாம் படி: இரண்டறிவு உயிரினம் சங்கு, ஆமை, நத்தை பொம்மைகளை வைக்க வேண்டும்.

மூன்றாம் படி: மூன்று அறிவு உயிரினம் கரையான், எறும்பு போன்றவை வைக்கலாம்.

நான்காம் படி: நான்கு அறிவு கொண்ட உயிரினம்  நண்டு, வண்டு பொம்மைகள் வைக்கலாம்.

ஐந்தாம் படி: ஐந்து அறிவு கொண்டுள்ள உயிரின பொம்மைகளை அதாவது விலங்குகள், பறவைகள் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஆறாம் படி: ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனித பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படி: மகான்கள், ரிஷிகள், முனிவர் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படி: நவகிரக அதிபதிகள், தேவர்களை வைக்கலாம்.

ஒன்பதாம் படி: மூன்று மூர்த்திகளின்(பிரம்மா, விஷ்ணு, சிவன்) பொம்மைகளையும்,  அவர்களின் தேவிகளின் பொம்மைகளையும் வைத்து அலங்கரிக்கலாம். ஆதிபராசக்தி அன்னை நடுநாயகியாக வைக்கலாம், தசதாவதாரம் பொம்மைகளை வைக்கலாம்.

ஆறறிவு படைத்த மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதே கொலுப்படியின் தத்துவம் ஆகும்.

நவராத்திரி

நவராத்திரி நாட்களில் மூன்று தேவிகளை மனதார வணங்கி வந்தால் ஏழ்மை நீங்கும், தேக ஆரோக்கியம் ஏற்படக்கூடும், கல்வி ஞானம் பெருகும், மனம் அமைதியாகும், திருமணம் தடை நீங்கும், குழந்தைப் பேறும் உண்டாகும், எதிரிகள் தொல்லைகள் அகலும், உத்யோகத்தில் உயர்வு ஏற்படக்கூடும்.

இதையும் படியுங்கள்: சௌபாக்கியங்களை அள்ளித் தரும் விஜயதசமி வழிபாடு!

நவராத்திரி நாட்களில் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள், கன்னி பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பூ, பழம், சீப்பு, கண்ணாடி, தட்சணை, ரவிக்கை, சுண்டல், பாயசம் அல்லது ஏதேனும் நைவேத்தியத்தை கொடுத்தால் நற்பலன்கள் உண்டாகும். அவரவர்களின் வசதிக்கேற்ப பொருட்களை வழங்கலாம். ஏதேனும் ஒரு பழத்தை வெற்றிலை,பாக்கு, குங்குமம், மஞ்சள் வைத்தும் கொடுக்கலாம்.

Leave a Comment