எல்லா ஊர்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மிக சிறப்பாக தமிழ்நாட்டில் ஒரு ஊரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு ஏரியாவே களைகட்டி இருக்கும் அத்தகைய ஒரு ஊர்தான் திருச்செந்தூரில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள குலசேகரப்பட்டினம் ஆகும்.
இங்குள்ள முத்தாரம்மன் கோவில் நவராத்திரி தசரா விழாதான் தூத்துக்குடி மாவட்ட அளவில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றாகி விட்டது.
இந்த விழா இப்போது தமிழ்நாடு முழுமைக்கும் தெரியும் ஒரு விழாவாகி விட்டது. இக்கோவிலில் நவராத்திரி விழாவுக்கு சில நாட்கள் முன்பிருந்தே பக்தர்கள் பலவித வேடங்களை இட்டு மாவட்டம் முழுவதும் சென்று பக்தர்களிடம் யாசகம் கேட்பர். பின்பு கோவிலில் அதை சேர்ப்பர்.
பலரும் இதை நேர்த்திக்கடனாக செய்வதுண்டு. முதல் வருடம் ஏதாவது கோரிக்கையை அம்மனிடம் நேர்ந்து கொண்டு அது ஜெயித்தால் அம்மனுக்காக ஏதாவது வேடம் இட்டு பக்தர்களிடம் யாசகம் கேட்டு கோவிலுக்கு செலுத்துவதாக வேண்டிக்கொண்டு அதை செய்து வருகின்றனர்.
இந்த நேரங்களில் இந்த மாவட்டத்தின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் என அனைத்திலும் இந்த படத்தில் இருப்பது போல் வித்தியாச வித்தியாச வேடமணிந்து பக்தர்களிடம் யாசகம் கேட்பதை பார்க்கலாம்.
விழாவின் கடைசி நாளன்று குலசேகரப்பட்டினம் கடற்கரையில் குலசை முத்தாரம்மன், சூரனை வதம் செய்வார்.
ஆனால் நவராத்திரி பத்து நாட்களும் இங்கு இமைக்க முடியாத அளவில் கூட்டம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தீராத வினைகள் பலவற்றை இந்த அம்மன் தீர்த்து வைப்பதால் இந்த அம்மனை இந்த மாவட்டத்தில் தேடிச்சென்று வழிபடாத மக்களே இல்லை எனலாம். இப்பகுதிகளில் பல கார்கள், பஸ்கள், வாடகை வண்டிகளுக்கு இந்த அம்மனின் பெயரே சூட்டப்பட்டிருக்கும்.