பெண்மையைக் கொண்டாடும் விழாவே நவராத்திரி. அரக்கர்கள் எல்லோரும் பெண்ணால் தங்களுக்கு மரணம் வராது தன்னை அழிக்க முடியாது என்று கருதி இறைவனிடம் பெண்களால் எங்களுக்கு அழிவு வரட்டும் என்று கேட்டனர்.
அப்படி கொடுத்த வரத்தின் பலனால் தான் அம்பாள் பல அவதாரங்கள் எடுத்து அரக்கர்களை அழிக்கிறாள். நவராத்திரி விழாவில் 5ம் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம். தேவியின் பெயர் ஸ்கந்த மாதா. நவராத்திரியின் 5ம் நாளான இன்று (30.09.2022) தேவியானவள் ஸ்கந்தமாதாவாகக் காட்சி தருகிறாள்.
பெண்மைக்கு உயர்வு என்றால் அது தாயாவது தான். கந்தனைப் பெற்ற தாயாக இருப்பதால் அவருக்கு ஸ்கந்த மாதா என்று பெயர். சூரர்களை அழிக்கணும்னு தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடுகின்றனர்.
சிவபெருமான் தனது 5 திருமுகத்துடன் அகோ முகமான 6வது திருமுகத்தையும் இணைத்து 6 நெற்றிக்கண்களில் இருந்தும் 6 அருட்பெருஞ்சோதிகளை வெளிப்படுத்துகிறார்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யாஜ்வதம் என்ற பஞ்சமுகங்களோடு அதோ முகம் என்ற 6வது முகத்தையும் இணைத்து தோன்றிய ஒளிச்சுடர்கள் எல்லாம் 1000 கோடி சூரியப்பிரகாசத்துடன் ஒளிவிடுகின்றன.
அதை வானத்தில் இருந்து வாயு தேவன் பிடித்து வெப்பம் தாங்க முடியாமல் அக்னி தேவனிடம் கொடுக்க அவரோ கங்கையில் கொண்டுவிட்டார். கங்கை வறண்டு திரண்டு நிலத்திற்கு வந்து விட்டது.
பின் சரவணப்பொய்கையிலே 1008 இதழ் அடுக்குத் தாமரையிலே எம்பெருமான் அழகாக அவதரிக்கிறார். ஆறுமுகம் 12 திருக்கரங்களோடு முருகர் அவதரிக்கிறார். உலகம் உய்ய அவதரித்த குழந்தை 6 குழந்தைகளாக இருக்கிறது. இந்த 6 குழந்தைகளையும் தாயார் பார்வதி தேவி ஒன்றாக இணைக்கிறாள்.
அப்போது தான் அந்தக்குழந்தை 6 முகம் 12 திருக்கரங்களோடு மாறியது. அப்படி மாறிய குழந்தையை தனது மடியில் அமர்த்தி தாயானவள் ஸ்கந்த மாதாவாகக் காட்சி தருகிறாள்.
அப்போது தான் பார்வதியும், பரமேஷ்வரனும் ஒன்றாக இணைந்து 6 குழந்தைகளையும் வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு இனி நீங்கள் நட்சத்திரங்களாக விளங்கக் கடவது என்று வரம் கொடுத்தனர்.
இந்த ஸ்கந்த மாதா தாமரை மலரிலும், சிம்மவாகனத்திலும் காட்சி தருவாள். தூய்மையும், உண்மையின் சொரூபமாகவும் காட்சி தருகிறாள்.
அம்பிகையின் பெயர் மோகினி அல்லது வைஷ்ணவி. நவதுர்க்கையில் ஸ்கந்தமாதாவாகக் காட்சி தருகிறாள். மனோரஞ்சிதம் மலர் கொண்டு அர்ச்சிக்கலாம். தயிர்சாதம், பூம்பருப்பு சுண்டல், மாதுளை ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். பந்துவராளி ராகத்தில் பாட்டுப்பாடி சிவப்பு நிற உடையணிந்து வழிபடலாம்.
துன்பங்கள் நீங்கி மன அமைதி, ஆத்ம அமைதி கிடைக்கிறது. நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி, பக்தர்களின் கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுகிறாள் தேவி.