சைவத்துக்கு திருநீறு எப்படி சமய சின்னமோ அதுப்போல வைணவத்துக்கு நாமக்கட்டி சமய சின்னமாகும். ஒருவரை ஏமாற்றுவதை நாமம் போடுதல்ன்னு கிண்டலா நாம சொன்னாலும் நாமம் இடும் முறையும், நாமம் போட உதவும் நாமக்கட்டியும் உருவான கதை ஒன்று இருக்கு. அது என்னவென்று பார்க்கலாமா?!
மகாரிஷியான காஷ்யப்பருக்கும், அவரது துணைவி விநதைக்கும் பிறந்தவர் கருடன். தன் அன்னையின் பெயரால் வைநதேயன் என அழைக்கப்பட்டார். ஒருசமயம், விநதை தன் சக்களத்தியான கத்ரு(நாகர்களின் தாய்)க்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தாயின் அடிமைத்தளை தீர வேண்டுமானால், தேவலோகம் சென்று அமுதக்கலசத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் கருடன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அன்னையை விடுவித்தார். இவரது அசாத்திய வலிமையினை கண்ட விஷ்ணு, இவரைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த கிரீடாசலத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையை உருவாக்கியவர் கருடன்தான். இந்த நிகழ்வினை நினைவுக்கூறும் விதமாக திருப்பதியில் கருடனின் பெயரால் கருடாத்ரி என்றொரு மலையும் உண்டு. ராவணனின் மகனான இந்திரஜித், லட்சுமணன்மீது நாகபாசத்தைத் தொடுத்தான். லட்சுமணன் அதில் கட்டுண்டு கிடந்தபோது, கருடன் அவரைக் காப்பாற்றினார். திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத் தீவிலிருந்த பாற்கட்டிகளை பூலோகத்திற்கு கொண்டு வந்தது கருடனே! இந்தக்கட்டியே சுவேதமிருத்திகை என்னும் நாமக்கட்டியாகும்.
இந்த நாமக்கட்டி(சுவேதமிருத்திகை)தான் லட்சுமணன்மீதான நாகபாசத்து கட்டினை உடைத்தது. அன்றிலிருந்தே இந்த வைணவர்கள் நாமம் இடுவதை வழக்கமாய் கொண்டனர். இந்த நாமத்துக்கு திருமண், ஸ்ரீசூர்ணம் எனவும் பேர்கள் உண்டு.. இரு வெள்ளை கோடுகளுக்கு இடையில் சிவப்பு நிறக்கோடு ஒன்றும் சேர்ந்த இணைப்பே நாமம். இதிலிருக்கும் இரண்டு வெண்கோடுகள் விஷ்ணுவின் திருப்பாதங்களையும், நடுவிலிருக்கும் சிவப்பு நிறக்கோடு மகாலட்சுமியின் அம்சம். உவர் மண் எப்படி ஆடைகளை தூய்மைப்படுத்துதோ அதுமாதிரியே இந்த திருமண் அது இடுபவரின் உள்ளத்தினை தூய்மைப்படுத்துது.
நாராயணின் 12 பெயர்களைக் குறிக்கும் வகையில் உடலின் பனிரெண்டு இடங்களில் இந்த நாமத்தினை இட்டுக்கொள்வது வைணவர்களின் வழக்கம்…
- நெற்றி
- நடு வயிறு (நாபி)
- நடு மார்பு (மார்பு)
- நடுகழுத்து (நெஞ்சு)
- வலது மார்பு
- வலது கை
- வலது தோள்
- இடது மார்பு
- இடது கை
- இடது தோள்
- பின்புறம் அடிமுதுகு
- பின்புறம் பிடரி.. என 12 இடங்களில் நாமம் எனப்படும் திருமண்ணை இட்டுக்கனும்.
அதேப்போல் ஒவ்வொரு இடத்திலும் திருமண் இடும்போதும் விஷ்ணுவின் 12 பெயர்களை உச்சரிக்கவேண்டும்.. அவை
- கேசவாய நம என்று நெற்றியிலும்
- நாராயணாய நம என்று நாபியிலும்
- மாதவாய நம என்று மார்பிலும்
- கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
- விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்
- மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்
- த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
- வாமனாய நம என்று இடது நாபியிலும்
- ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
- ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
- பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
-
தாமோதராய நம என்று பிடரியிலும்.. இறைவனின் பெயரை சொல்லியபடியே திருமண்ணை இட்டுக்கொள்ள வேண்டும். திருமண் எனப்படும் நாமக்கட்டி சமயச்சின்னமாய் மட்டுமில்லாமல் சிறந்த மருத்துவ பொருளாகவும் இருக்கின்றது.