இந்து சமயத்தில் சைவமும், வைணவமும் இரு கண்கள். சைவத்தில் விபூதி இடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதேயளவு வைணவத்தில் நாமம் இட்டுக்கொள்வது இன்றியமையாதது மட்டுமல்லாது புனிதமானதும்கூட. இதனை திருமண் காப்பு தரித்தல் என வைணவர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீமன் நாராயணன் வைணவத்தின் முதல் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். திருமண் எனும் திருநாமம் திருமாலின் பாதங்களை குறிப்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாலட்சுமியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எப்படி உவர் மண் நம் உடையில் உள்ள அழுக்கை போக்குகிறதோ, அதேப்போல் நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை இந்த திருமண் தூய்மையாக்குகிறது. அதற்கு தகுந்த மாதிரி, புனித இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் இந்த திருமண் சேமிக்கப்படுகிறது.
திருமண் தத்துவம்:
ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தை குறிக்கும் இந்த திருமண், நம் உடல் ஒருநாள் இந்த மண்ணோடு மண்ணாகிப்போகும் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அணியப்படுகிறது. அதனால் ஸ்ரீமன் நாராயணின் திருப்பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள் என்பதை அறிவுறுத்துவது தான் திருமண் காப்பாகும். வைணவ சம்பிரதாயத்தில் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உள்ளது என அனைவருக்கும் தெரியும். வடகலை வைணவத்தினர் மர்கட நியாயப்படி இறைவனை சரணாகதி அடைவதைக் குறிப்பதாகும். அவன் பாதத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையேல் அவனுக்கு பெருமாளின் அருள் கிடைக்காது என்பது அவர்களின் நம்பிக்கை. வடகலை, தென்கலை என்ற இருபிரிவினர்களும் இருவேறு விதமாக நாமம் திருமண் இட்டுக்கொள்வர்.
தென்கலை திருமண்
திருமாலின் பாதம் வைத்துப் போடப்படுவது தென்கலை நாமம்.
வடகலை திருமண்
பாதம் இல்லாமல் வளைவாக போடப்படுவது, நெற்றியில் நேர்கோடு போடுவது போல் நாமம்.
விபூதி தரிப்பதற்கென்று சில விதிமுறைகள் இருப்பதுப்போல் திருமண் இட்டுக்கொள்வதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றது.
திருமாலின் 12 பெயர்களை குறிக்கும் வகையில், நம் உடலில் 12 இடங்களில் திருநாமம் இட்டுக் கொள்ளுவது சம்பிரதாயம்.
திருமண் இட்டுக்கொள்ளும் இடங்கள்:
நெற்றி
நடு வயிறு (நாபி)
நடு மார்பு (மார்பு)
நடுகழுத்து (நெஞ்சு)
வலது மார்பு
வலது கை
வலது தோள்
இடது மார்பு
இடது கை
இடது தோள்
பின்புறம் அடிமுதுகு
பின்புறம் பிடரி
திருமண் கப்பு மற்றும் ஸ்ரீசூர்ணம் நாம் இட்டுக்கொள்ளும் போது சொல்ல வேண்டிய பெருமாளின் நாமங்கள்:
கேசவாய நம என நெற்றியிலும்
நாராயணாய நம என நாபியிலும்
மாதவாய நம என மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணவே நம என வலது மார்பிலும்
மதுஸூதனாய நம என வலது புயத்திலும்
த்ரிவிக்ரமாய நம என வலது தோளிலும்
வாமனாய நம என இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என இடது தோளிலும்
பத்மநாபாய நம என அடிமுதுகிலும்
தாமோதராய நம என பிடரியிலும் திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் நாமம் என்பது ஏதோ அசிங்கம் போலவும் அவமானச்சின்னமாகவும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கு. அதுமட்டுமில்லாமல், வாரா கடனை நாம இடுவது என பேசிப்பேசி நாம இடுவது அவமானதாக மனதில் பதிந்து விட்டது.
மருத்துவரீதியாக நெற்றியில்தான் நாடிகளின் சங்கமம் இருக்கும். ஆக்யா சக்கரம் என்னும் புருவ மத்தியில் இருந்து தலை உச்சி வரை இடை, பிங்கலை, சுஷும்னா என்னும் 3 நாடிகள் சங்கமித்துப் பயணிக்கின்றன. திருமண் மற்றும் ஸ்ரீ சூர்ணம் என்னும் நாமம் தரிப்பதால் இம்மூன்று நாடிகளின் குளிர்ச்சி மற்றும் சுத்தம் ஏற்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுள் வளர்ச்சிக்கும் மிக முக்கியமாக நாடி சாஸ்திரம் உரைக்கின்றது. ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்னும் பழமொழி தோன்றவும் இதுவே காரணம். இனியேனும் நெற்றியில் திருநாமம் அணிந்து இருப்பதை நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தவும் வேண்டும்.
திருமண் இடுவோம், சகல நன்மைகளையும் பெறுவோம்!!