மாசி மகம் வருடா வருடம் மாசி மாதத்தில் வரும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.
கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். கடலில் மட்டுமல்ல எந்த ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடலாம்.
நமக்காக உள்ள பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லி வேண்டலாம். எங்கெங்கு புண்ணிய நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உண்டோ அங்கெல்லாம் நீராடலாம்.
கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் தீர்த்தங்கள், பாபநாசம் அருவி, காவிரி நதிபாயும் கோவில் கொண்ட இடங்கள், சேதுக்கரை,பவானி சங்கமேஸ்வரர் என புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் நீராடி நமக்காகவும் நம் முன்னோர்க்காகவும் நம் குடும்பத்திற்காகவும் வேண்டிக்கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் நடக்கும் தெப்பத்திருவிழாவிலும் கலந்து செளமிய நாராயண பெருமாளை வழிபட்டு வாழ்வில் சகல செளபாக்கியங்களும் பெறலாம்.