மாங்கல்ய பலம் அருளும் ஆடி அமாவாசை

By Staff

Published:


5495a51f7cdd1c6f57a65d4a04bfa053

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் என சொல்லப்படும் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமென எல்லாருக்கும் தெரியும். அதனால் அமாவாசையன்று தந்தைக்கும், பௌர்ணமியன்று தாய்க்கும் தர்ப்பணம் கொடுக்கவேண்டுமென்பது முன்பிருந்த நியதி. ஆனா, காலப்போக்கில் இருவருக்கும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கத்தில் உண்டானது. எது எப்படியோ முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் சரிதான். இப்படி தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு தோசத்திலிருந்து தப்பிக்கலாம்.

அமாவாசை தினம் நீத்தார் கடன் செய்வதற்கு மட்டுமல்ல, மாங்கல்ய தோசம் நீங்கவும் ஆடி அமாவாசை அருள்கிறது..

8ab3dba756db4dd36f2a8501c62144a0

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். மிகுந்த பராக்கிரமசாலி. ஆனாலும், அவனுக்குப்பின் அரசாட்சி புரிய வாரிசு எதும் இல்லை. இதனால் அழகேசன் மட்டுமில்லாமல் அவனது ராணி உள்பட, மந்திரிகளும், நாட்டு மக்களும் வருத்தம் கொண்டனர். வாரிசு வரம் வேண்டி அழகேசன், தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு நாட்டுக்கு திரும்பினான். இறை அருளால் அழகேசனுக்கு மகன் ஒருவன் பிறந்தான். மன்னன் மிக்க மகிழ்ச்சியோடு உறங்க சென்றான். அவனது கனவில் தெளிவில்லாத உருவம் ஒன்று தோன்றி, உனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று சொல்ல மன்னன் மீண்டும் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதி வேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றில் மனமுருகி அன்னையை வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

d0b9f184bb7c45d0ca15b64b87bfeb86

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்.. தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

அன்றிலிருந்து அமாவாசை தினத்தன்று விரதமிருந்து முன்னோர்களை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நியதி.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும் அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள். தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டார்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர். ஆடி அமாவாசையன்று , தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு – கேது தோஷம் சர்ப்ப தோஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குள வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சவுபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆடி அமாவாசை: பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்து குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும் போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பவுர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் அமை என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது. பித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும் போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார், அப்பொழுது இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும் என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும் என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்திணைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார், முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

#ஆடி_அமாவாசையில்_இறைவன்_ இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால்,

நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.

இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருகண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

Leave a Comment