விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது, கொழுக்கட்டையும், சுண்டலும், ஒவ்வொரு வீதியிலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளும், ரேடியோப் பெட்டிகளில் விநாயகர் பாடலும்தான். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு படையல் இட்டு, அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியினை பெரிதளவில் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடும் மாநிலம் மகாராஷ்டிரா மாநிலம் தான். ஏனெனில் விநாயகர் சதுர்த்தி உருவானதே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான்.
மகராஷ்டிராவில் ஒவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலான விநாயகரின் மண் சிலைகளுக்கு 10 நாட்களும் பூஜைகள் செய்வர்.
மிகப் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை அதிக அளவில் மும்பை நகரத்தில் பார்க்க முடியும். மற்ற மாநிலத்தைவிட ஒவ்வொருவரும் இதனைப் பொது பண்டிகையாக கொண்டாடாமல், தங்கள் வீட்டின் குடும்ப விழாவாகவே கருதி கொண்டாடவே செய்வர்.
10நாட்கள் முடிந்த பின்னர் மேளதாளங்கள் முழங்க மும்பை மாநகரின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான ‘கிர்கவ்ம் சௌபாட்டி’ என்ற இடத்தில் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே இங்குதான் அதிக அளவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.