தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேறி கோலகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இதன் சிகர நிகழ்ச்சி. இதன் முத்தாய்ப்பான நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். இந்த இருவிழாக்களும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறும். அந்த வகையில் மதுரையே விழாக்கோலம் பூணும்.
எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாகத் தான் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மே 2ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், மே 5ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது எப்படி? கள்ளழகர் வைகை ஆற்றுக்கு ஏன் வந்தார் என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
சைவமும், வைணவமும் இணையும் பண்பாட்டு திருவிழா. ஒருகாலத்தில் மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை அறுவடை முடியாத நிலையில் வேளாண் பெருமக்களால் காண முடியாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது என்கிறது வரலாறு.
சோழவந்தான் இடத்திற்கு அருகே தேனூர் என்ற இடத்திற்கு சென்று விட்டு வந்து கொண்டு இருந்த அழகர் ஊர்வலம் திருக்கல்யாணம் முடிந்து 2 நாள் கழித்து மதுரைக்கு வரும்படி மாற்றப்பட்டுள்ளது. வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்க அழகர் செல்லும் இடம் தேனூர் மண்டபம். தேனூரைச் சேர்ந்தவர்களே இங்கு கோயில் மரியாதையைப் பெறுகின்றனர்.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஊர்வலம் ஆகிய இரண்டு விழாக்களையும் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் தான் இணைத்துள்ளார் என்கிறது வரலாறு.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமைத்த தேர்களை நிறுத்த ஆட்களை சேர்க்கவும், கால்நடை சந்தைகளை நடத்தவும் மக்கள் தம்முள் கலந்து உறவாடவும் மிகப்பெரிய திருவிழாவாக இந்த சித்திரை திருவிழா விளங்குகிறது. இந்த நோக்கத்திற்காகவே திருமலை நாயக்கர் சித்திரை திருவிழாவைக் கொண்டாடச் செய்தார் என்கிறது வரலாறு.
அதே வேளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு கள்ளழகர் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்து விடுகிறது. இதனால் வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு கள்ளழகர் திரும்பிச் செல்வதாகவும் கூறுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
பல்லாயிரக்கணக்கான விருஷங்களுக்கு முன்னால் மலையத்துவஜ பாண்டிய மன்னன் மதுரையை ஆண்டு வந்தார். அவருக்கும், அவரது மனைவி காஞ்சனமாலைக்கும் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. அதனால் சிவபெருமானை நோக்கி இவர்கள் யாகம் வளர்த்தனர். அந்த யாகத்தீயில் இருந்து பெண் குழந்தை பிறந்து வந்து பாண்டிய மன்னனுக்கு மகளாக வளர ஆரம்பித்தது.
இந்தப் பெண் தான் சக்தி தேவியின் அம்சமாகவே இறைவனால் இந்தப் பூமிக்கு அனுப்பப்படுகிறது. அதனால் பொண்ணை நல்லா வளர்த்து வாங்க. சரியான நேரம் வரும்போது நானே இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சிவபெருமான் சொல்லி அந்தக் குழந்தையை இவர்களுக்கு வரமாகக் கொடுக்கிறார்.
அப்படிப்பட்ட பெண் தான் பாண்டிநாட்டு இளவரசி மீனாட்சி அம்மன். ஆண்வாரிசு இல்லாத குறையே இந்த பாண்டிநாட்டுக்கு தெரியாத மாதிரி மிகப்பெரிய வீராங்கனையாக வளர்ந்து வருகிறார். தொடர்;ந்து அவருக்கு பாண்டிநாட்டு அரசியாக முடிசூட்டப்படுகிறது. பட்டத்து ராணியாக முடிசூட்டியதும் தனது ஆட்சிக்குக் கீழ் இந்த உலகையே கொண்டு வர வேண்டும் என மீனாட்சி அம்மன் நினைக்கிறார்.
உலகில் உள்ள அத்தனை மன்னர்களையும் தோற்கடித்து பாண்டிநாட்டு கொடியை பறக்கவிடுகிறார். அத்தனையையும் தோற்கடித்த உடன் ஜெயிப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்றதும் கைலாச மலை மீதே போர் தொடுக்க ஆரம்பிக்கிறார். அங்கே போய் சிவபெருமானைக் கண்டதும் அம்மனுக்குக் காதல் வந்துவிடுகிறது. தான் உண்மையில் யார் என்றும், இந்த மனிதப்பிறவியை ஏன் எடுத்தோம் என்பதையும் மீனாட்சி அம்மன் புரிந்து கொள்கிறார்.
அதனால் யுத்தம் செய்ய வந்த அம்மன் சாந்தமாகிறார். சிவபெருமான், மீனாட்சி அம்மனிடம் நான் மதுரையில் வைத்தே பூதகணங்களுடன் வந்து உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். தொடர்ந்து மதுரை வந்து மீனாட்சி அம்மனை சுந்தரரேசுவரராக வந்து கல்யாணம் செய்து கொள்கிறார்.
கள்ளழகர் மதுரை வருகை
அழகர் கோவிலுக்கு மேல் ராக்காயி அம்மன் தீர்த்தம், நூபுர கங்கை என ஒரு தீர்த்தம் இருக்கிறது. அங்கு சுதாபஸ் முனிவர் பெருமாள் பற்றிய சிந்தனையில் தீர்த்தத்தில் குளித்துக் கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அதைக் கண்டு கொள்ளாத சுதாபஸ் முனிவர் பெருமாளையே நினைத்தபடி இருந்துள்ளார்.
இதனைக் கண்டு கோபம் கொண்ட துர்வாசர், நீ மண்டூகமாகக் கடவாய் என்கிறார். உடனே சாமி என் தப்பு தான். உங்களை பார்க்காமல் இருந்துட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சிக்கோங்க. எனக்கு சாபவிமோசனத்தையும் நீங்களே சொல்லிடுங்கன்னு கேட்கிறார் சுதாபஸ் முனிவர்.
நீ இங்கு இருந்து வைகை ஆற்றுக்குக் கிளம்பி போய் அங்கு தவம் செய். அப்போது கள்ளழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார் என்கிறார். உடனே மண்டூக மகரிஷி பெருமாளை நோக்கி மதுரை வைகை ஆற்றில் கடும் தவம் இருக்கிறார். அவரது தவத்தை மெச்சிய பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்காக மதுரை வருகிறார்.
அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை வருவதற்குள் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்து விடுகிறது. இதனை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது கேள்விப்பட்டு கோபத்தில் திரும்பிச் சென்று விடுகிறார் என்றும் வரலாறு கூறுகிறது.