நாயன்மார்கள் வரிசையில் முதன்முதலாய் நாம பார்க்கப்போறது “அதிபத்த நாயனார்”. இவர் மெத்த படித்தவரில்லை. கோவில் கோவிலாய் சுற்றியலைந்தவரில்லை. சதா சர்வக்காலமும் பூஜை, புனஸ்காரம்ன்னு செய்தவரில்லை. இவ்வளவு ஏன்?! நம்மால் உயர்ந்த குலம்ன்னு சொல்லப்பட்டும் எந்த குலத்திலயும் பிறக்கவில்லை
மாறாக, நம்மால் கீழ் ஜாதி என சொல்லப்படும் பரதவர் குலத்தில் பிறந்தவர்தான் இந்த “அதிபத்த நாயனார்”. நாகப்பட்டினம் அருகில் ‘நுளைப்பாடி’ என்ற இடத்தில் பிறந்து வாழ்ந்து வந்தார். தன் பக்தியை வெளிப்படுத்த ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான கொள்கை.. தினமும் தான் பிடிக்கும் மீன்களில் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக மீண்டும் ஆற்றிலேயே விட்டுவிடுவார். எக்காரணம் கொண்டும் இந்த திருப்பணியை அவர் கைவிட்டாரில்லை.
அதிபத்த நாயனாரின் இறைபக்தியை உலகறிய செய்யும் விதமாய் சிவப்பெருமான் திருவிளையாடல் நடத்தினார். அதன்படி, மெல்ல மெல்ல அதிபத்தர் வீசும் வலையில் மீன்கள் சிக்குவது குறைந்துவிட்டது. இதனால், அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வீழ ஆரம்பித்தது.
அடுத்த சில நாட்கள் ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைக்குமாறு செய்தார் இறைவன். அதையும் இறைவனுக்கே கடலில் அர்ப்பணித்து விடுவார். அதிபத்தர் கடும் வறுமையில் வாடியது. அதிபத்தர் உடலும் தளர்ந்துக்கொண்டே வந்தது. அதிபத்தரின் மனைவி, அவரிடம் சென்று பிள்ளைகள் பசியால் வாடுகிறது. வீட்டில் எதுமில்லை. பொருள் எதாவது சம்பாதித்து கொண்டு வாருங்கள் என வேண்டி நின்றாள்.
அன்றைய தினம் குழந்தையின் பசியாற்ற வேண்டி கடவுளை வேண்டியபடி கடலுக்குள் சென்றார். முதல் முறை வலை வீசியபோதே நவரத்தின கற்களும்,, நவமணிகளும் பதித்த தங்க மீன் ஒன்று சிக்கியது. அதைக்கண்டதும் உடன் வந்த மீனவர்கள் அதிபத்தரே! இன்று உமக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதைக்கொண்டு உன் வம்சமே செல்வச்செழிப்புடன் வாழலாம், இதைக்கொண்டுபோய் உன் மனைவியிடம் கொடு. அவள் மிக்க மகிழ்ச்சி அடைவாள் எனக்கூறி சந்தோஷித்தனர்.
ஆனால், அதிபத்தரோ சிறிதும் சலனமின்றி அந்த தங்கமீனை , எப்பொழுதும் போல ஆற்றில் விட்டார். அதிபத்தரின் பக்தியையும், கொண்ட கொள்கையில் மாறாத தன்மையையும் கண்டு அனவரும் திகைத்து நின்றபோதே வானத்தை கிழித்துக்கொண்டு அம்மையப்பனாய் நந்திதேவர் மீதேறி எல்லாருக்கும் காட்சியளித்து சிவபுரியிலே தமது திருவடி நிழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார்.
இன்றும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைப்பெறும். அத்திருவிழாவில் அதிபத்தரின் உற்சவ சிலைய ஒரு கட்டுமரத்தில் எழுந்தருள செய்து, கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மீனவர்கள் வலைவீசுவது போலவும், வலையில் தங்கமீன் கிடைப்பது போலவும், அதை அதிபத்தர் இறைவனுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவனை செய்ய இறைவன் அதிபத்தருக்கு முக்தி அளிக்க கடற்கரையில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிகிறார்.
அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுது. இறைவனின் அருள் கிடைக்க படிப்போ, விரதமோ, பொருளோ தேவையில்லை.. தூய்மை மனதும், இறை அர்ப்பணிப்பு போதும் என அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தது.
நாயன்மார்களின் கதை தொடரும்…