நாளை (28.7.2022) அன்று பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை நாள். சாதாரண அமாவாசையை விட சக்தி வாய்ந்தது. இந்த நாளில் நமது முன்னோர்கள் பூமிக்கு எப்படி வருகிறார்கள்? அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? எப்போது திரும்புவார்கள் என பார்க்கலாமா…!
இறந்து போனவங்க எதுக்காக மேல் உலகத்திலிருந்து இறங்கி பூமிக்கு வர்றாங்க. பூமில ஒரு வருஷம்னா தேவலோகத்துல அதுதான் ஒருநாள். அங்க இரவுப்பொழுது ஆரம்பிக்குறது இந்த ஆடிமாசத்துல தான். இதுல தொடங்கி மார்கழி வரை ஆறு மாசக்காலமானது தேவர்களுக்கு இரவுப் பொழுது. மீதமுள்ள ஆறு மாசம் பகல்பொழுது.
இந்த ஆடி மாசத்துல தேவர்கள் ரெஸ்ட் எடுக்கப்போறாங்க அல்லவா… அப்போ பூமியில உள்ள தீயசக்திகள் ரொம்ப உக்கிரமா ஆயிடும். அதனால தான் இந்த ஆடி மாசத்துல அம்மனின் அருளைப் பெற பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பித்ரு லோகத்துல இருந்து நம் முன்னோர்கள் தான் பூமிக்கு வர்றாங்க. ஈரேழு 14 லோகங்களில் பூமி 7வது லோகத்துல இருக்கு. இறந்த நம் முன்னோர்கள் ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் உள்ளனர். அதற்கு மேல் உள்ளது புவர் லோகம். இதற்கும் சொர்க்க லோகத்துக்கும் இடையில் பித்ரு லோகமும், பிரேத்த லோகமும் உள்ளது. இந்த நிலையில் தான் இறந்தோருக்கு ஜட்ஜ்மண்ட் நடக்கிறது.
அவங்களோட பாவ, புண்ணிய கணக்குகள் பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போவாங்க. சொர்க்கம் போற அளவுக்கு புண்ணியம் பண்ணல. இதனால இன்னும் மறுபிறவி எடுக்க வேண்டியிருக்குன்னா இவங்க பித்ரு லோகத்துல தங்க வைக்கப்படுவாங்க. ஆனால் பித்ருக்கள் எந்தக் கெடுதலையும் பண்ணமாட்டாங்க.
தீமை செய்யக்கூடிய பேய்கள், பிசாசுகள் எல்லாருமே பூமியில் தான் சுத்திக்கிட்டு இருப்பாங்க. தீயில கருகினவங்க, தற்கொலை செய்தவங்க, கொலை செய்யப்பட்டவங்க இவங்க தான் பேய், பிசாசுகளாக சுத்திக்கிட்டு இருப்பாங்க. அவங்க வாழ்ந்த இடத்துக்கு எல்லாம் வருவாங்க. யாரால அவங்க பாதிக்கப்பட்டாங்களோ அவங்கள அவங்க பழிவாங்கறதுக்காக பல கெடுதல்கள் செய்வாங்க.
ரொம்ப கெடுதல் பண்ணிருக்காங்கன்னா அவங்க பித்ரு லோகத்துல இருந்து அடுத்த மனிதப்பிறவி எடுக்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. ரொம்ப கெட்டது பண்ணிருந்தாங்கன்னா நரகலோகத்தில இருந்து அவங்களுக்கான தண்டனையை அனுபவிச்சிட்டு அடுத்த பிறவில ஆடாகவோ, மாடாகவோ, நாயாகவோ, பன்றியாகவோ ஏதோ ஒரு மிருகப்பிறவியை எடுக்க வெயிட் பண்ணுவாங்க.
பித்ருக்கள் எதுக்காக பூமிக்கு வர்றாங்க. இவங்க அடுத்த பிறவி எடுக்குற வரைக்கும் அவங்களோட சொந்தங்களை எல்லாம் பார்ப்பதற்கு வருஷத்துல ஒரு தடவை பூமிக்கு இறங்கி வருவாங்க. இவங்கள எமதர்மராஜன் அனுப்பி வைப்பராம். இவங்க எல்லாருமே தங்க விமானங்கள்ல சூரியனோட கதிர்களோடு சேர்ந்து பூமிக்கு நம்ம கண்ணுக்குத் தெரியாம வருவாங்க.
ஒவ்வொரு அமாவாசையிலும் நம் முன்னோர்களோட ஆத்மா நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும். அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும். கிணறு, பெரிய தண்ணீர் அண்டா என்றால் அங்கும் நிற்கும். நமக்கு இவங்க படையல் போடுறாங்களா…அமாவாசை அன்னைக்கு நம்ம நினைச்சு பார்க்குறாங்களான்னு பார்க்க வருமாம். அதனால தான் அவங்களுக்கு அன்னைக்கு படையல் போடணும்.
இல்லாவிட்டால் அவ்வளவு தூரத்தில இருந்து பார்க்க வந்துருக்குற நம் முன்னோர்களோட ஆத்மா ரொம்பவே வருத்தப்பட்டு பசியோடும், பட்டினியோடும் பித்ரு லோகத்துக்குப் போய்ச்சேருமாம். அப்படிப் போகும்போது அவங்க நம்மை சபிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
எல்லா அமாவாசைக்கும் முடியலன்னாலும் முக்கியமாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் செய்வது நல்ல பலன் தரும். இவற்றில் ஆடி அமாவாசைக்கு பித்ருக்கள் மேலே இருந்து பூமிக்குப் புறப்படுகிறார்கள்.
புரட்டாசி அமாவாசையில் பூமியை வந்தடைகிறார்கள். தை அமாவாசையில் பித்ருக்கள் பூமியை விட்டு மீண்டும் மேலே கிளம்புகிறார்கள். அந்த ஆடி அமாவாசைக்கு அவங்கள வரவேற்க தர்ப்பணம் கொடுக்க வேண்டியது மிக முக்கியம். அப்போது தான் அவங்க சந்தோஷப்பட்டு நமக்கு நல்லது செய்வாங்க.