வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யலாமா? வழிபாடு செய்யும் முறைகள் இதோ…

By Meena

Published:

கோவில்களில் திருவிளக்கு பூஜை செய்வதை பார்த்திருப்போம். பெண்களெல்லாம் ஒன்று கூடி விளக்கை வைத்து பாடல்கள் பாடி விளக்கு பூஜை செய்வர். ஆனால் இந்த விளக்கு பூஜை வீட்டில் செய்யலாமா எந்த நாட்களில் செய்ய வேண்டும் பூஜை செய்யும் வழிமுறைகள் என்ன என்பதைப்பற்றி இனி காண்போம்.

விளக்கு மகாலட்சுமியின் அம்சம். அஷ்ட லட்சுமிகளும் விளக்கில் வாசம் செய்வதாக கூறுவர். அப்படிப்பட்ட விளக்கு பூஜையை தாராளமாக வீட்டில் செய்யலாம். ஆனால் அதற்கு குறிப்பிட்ட நாட்கள் உண்டு. நீங்கள் விளக்கு பூஜை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் தமிழ் மாதம் தொடங்கிய முதல் வெள்ளிக்கிழமை அல்லது வளர்பிறை நாட்களில் விளக்கு பூஜையை செய்ய வேண்டும். பூஜை செய்யும் அன்று பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு விளக்குகளை நன்றாக சுத்தம் செய்து ஒற்றைப்படையில் சந்தன குங்குமம் போட்டு வைக்க வேண்டும்.

திருவிளக்கிற்கு பொட்டு வைத்த உடன் அதற்கு மஞ்சள் கொண்டு மாங்கல்ய சரடு கட்ட வேண்டும். ஒரு சிலர் விளக்கையே அம்மன் போல் முகம் வைத்து சேலை கட்டி அலங்கரிப்பர். அப்படி செய்ய முடியாதவர்கள் மாங்கல்ய சரடு கட்டி சிறிய மாலை போட்டு மனை வைத்து அதில் மேல் விளக்கை அமர வைக்க வேண்டும். லட்சுமி அம்மனுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியத்தை தயார் செய்து கொள்ளுங்கள். விளக்கு பூஜை முடியும் வரையிலும் அடிக்கடி எண்ணெய் உற்ற கூடாது. முழுவதுமாக எண்ணெயை விளக்கில் நிரப்பி விடுங்கள். திரியை சற்று அதிகமாகவே எறிய விடுங்கள்.

அதற்குப் பிறகு அஷ்டலட்சுமிகளை நினைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், சரஸ்வதி ஸ்லோகங்கள், லட்சுமி மந்திரம், போற்றிகள் போன்றவற்றை பாட வேண்டும். திருவிளக்கு பூஜை வீட்டில் செய்வதனால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும் தனம் தானியம் குறைவில்லாமல் இருக்கும். சகல ஐஸ்வர்யங்கள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.