வருடந்தோறும் சில நோன்புகள் பெண்களுக்கு என்றே வருகிறது. அதில் மிக முக்கியமானது காரடையான் நோன்பு எனப்படும் சாவித்திரி விரதம். சிலர் கௌரி விரதம் என்றும் சொல்வார்கள்.
அதற்கு ஒரு கதை உண்டு. சத்தியவான் சாவித்திரி நல்ல அற்புதமான மனமொத்த தம்பதியராக வாழ்ந்தனர். விதிவசத்தால் அவர்கள் காட்டில் வாழ வேண்டிய சூழல் வந்துவிட்டது. கெட்ட நேரத்தால் நாட்டை இழந்து வீட்டை இழந்து காட்டில் வசித்தாலும் உயிரையும் இழக்கும் சூழலுக்கு ஆளானார். தனது கணவனுக்கு இப்படி ஒரு சூழல் நேரப்போகிறது என்று தெரிந்ததும் எப்படியாவது கணவனைக் காப்பாற்ற வேண்டும் என சாவித்திரி கௌரியின் திருவடிகளைப் பற்றிக்கொள்கிறாள்.
அம்பிகையிடம் எல்லாப் பெண்களுமே தான் தீர்க்கசுமங்கலியாக இருக்க வேண்டும் என கேட்பார்கள். காட்டில் அதற்கான விரதத்தை சாவித்திரி கடைபிடித்தாள். தனக்குக் கிடைத்த எளிய பொருள்களைக் கொண்டு விடாமல் அம்பிகையை வழிபட்டாள். சத்தியவானின் உயிரை எமன் எடுத்துப் போவதைப் பார்த்ததும் அவரைப் பின்தொடர்கிறாள் சாவித்திரி. அப்படியே தனது சக்தியைக் கொண்டு எமலோகம் வரை சாவித்திரி வந்து விட்டாள். அவளது பக்தியைக் கண்டு புருஷனைத் தவிர எதை வேணாலும் கேள்.
நான் தருகிறேன் என்று எமன் கேட்கிறார். அதற்கு சாவித்திரியோ இதுதான் சரியான தருணம் என்று கேட்டு, எனக்கு குழந்தை வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு எமனும் அவசரத்தில் தந்தோம் என்றார். அதன்பின்னர் தான் எமனுக்கே தெரிந்தது. ஆகா அவசரப்பட்டு விட்டோமே என பிறகு வேறென்ன செய்வது என்று புருஷனை உயிரோடு திருப்பிக் கொடுத்தார் எமன். அப்படி சத்தியவானை எமலோகத்தில் சென்று மீட்டவள் தான் சாவித்திரி.
ஒரு பெண் நினைத்தால் தன்னையும் தன் கணவனையும் காப்பாற்றி விடுவாள். இந்த அற்புதமான காரடையான் நோன்பு 14.3.2024 வியாழக்கிழமை வருகிறது.
அதிகாலை 6.40 மணி முதல் மதியம் 12.45 மணணி வரை நோன்பு வருகிறது. காலை 7.30 மணிக்கு மேல் படையல் படைக்கலாம். காலை 11 மணி முதல் 12 மணி வரை தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்ளலாம். அம்பாள் கௌரி ரூபமாக, ராஜராஜேஸ்வரியாக இல்லாவிட்டால், மீனாட்சி, காமாட்சி ரூபத்தில் இருந்தாலும் அந்தப் படத்தை வைத்து பூஜை செய்யலாம்.
காராமணி பயிறு வைத்து கார அடை, வெள்ள அடை வைத்தும், 2 வாழைப்பழம் வெத்தலைப்பாக்கு, மஞ்சள் கயிறு வைத்து வழிபடலாம். விரதம் இருப்பது அவரவர் உடல்நிலையைப் பொருத்தது. இந்த நாளில் கணவர் வேலைக்குப் போகும் முன்பே கூட இந்தப் பூஜையை முடித்துக்கொள்ளலாம். இதில் நோன்புக்கயிறு என்பதை கையிலும் கட்டலாம். தாலிச்சரடாகவும் கட்டிக் கொள்ளலாம். தேவை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். கட்டாயம் இல்லை.
மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.