ஆடி அமாவாசையில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள்…!!!

By Sankar Velu

Published:

ஆடி அமாவாசை என்றாலே நாம் முன்னோர்களை வழிபட வேண்டும் என்று விரும்பி ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் செய்வதுண்டு. நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த வழிபாட்டை பின்பற்றும் நாள் இது. இந்த நாளில் அருகில் உள்ள புனித தலங்களுக்குச் செல்வர். ராமேஸ்வரம், சதுரகிரி போன்ற இடங்கள் விசேஷமானது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை அன்று (28.07.2022) வருகிறது.

தர்ப்பணத்திற்கும் சிரார்த்தத்திற்கும் வித்தியாசம் உண்டு. அமாவாசை அன்று செய்யக்கூடியதற்கு தர்ப்பணம் என்ற பெயர். மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட்டு எள்ளும் தண்ணீரும் இறைப்பது, கோவில்களில் வைத்து தர்ப்பணம் செய்வது, பசுமாட்டுக்கு அகத்திக்கீரைக் கொடுப்பது என்று பலரும் வழிபடுவதுண்டு. அன்று மதியம் இலை போட்டு அவர்களுக்கு படைத்த பிறகு சாப்பிடுவது அமாவாசை விரதத்தைப் பூர்த்தி செய்யும். நம் முன்னோர்கள் யாரேனும் இறந்தால் அந்த திதி அன்று வரும் போது செய்யக்கூடியதற்கு சிரார்த்தம் என்று பெயர். இதை ஆண்டுதோறும் கடைபிடித்து வரலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் எப்போதும் வரும் அமாவாசை அன்று செய்வதைத் தர்ப்பணம் எனலாம்.

Aadi amavasai 1
Aadi amavasai

நாம் இந்த உலகிற்கு வருவதற்கு காரணமானவர்கள் நம் முன்னோர்கள். நாம் எப்போதுமே முன்னோர்களை மறந்து விடக்கூடாது. தர்ப்பணம் ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். சாதாரணமாக சிறு உதவி செய்தாலே நாம் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது என்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்கள் தான் இந்த உலகிற்கே நம்மைத் தந்துள்ளார்கள். அவர்களை நாம் எப்படி மறக்க முடியும்? அவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ நமக்குத் தேவையில்லை. இருந்தாலும் அவர்களை நாம் இந்த ஒரே காரணத்திற்காக வழிபட்டே ஆக வேண்டும். எல்லா ஆன்மாக்களும் இந்த உலகில் பாவம் மட்டும் செய்திருக்காது.

அதே போல எல்லா ஆன்மாக்களும் இந்த உலகில் புண்ணியம் மட்டுமே செய்திருக்காது. இரண்டும் கலந்து தான் செய்திருக்கும். அதில் எது மிகையாக உள்ளதோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். அந்த ஆன்மாக்கள் மேல் உலகில் எந்த வித பலனும் கிடைக்கப்பெறாமல் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தால் அதற்காக நாம் செய்வது தான் தர்ப்பணம்.

இந்த உலகில் நாம் செய்யும் தர்ப்பணத்தில் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் மேல் உலகிற்குச் சென்று நம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு நல்ல வழியைக் காட்டும். அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் கிட்டும்.

audi padayal
audi padayal

இது தான் நாம் தர்ப்பணம் செய்வதன் முக்கிய நோக்கம். உங்களால் பெரிய அளவில் இந்த தர்ப்பணத்தைக் கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீருமாவது இறைத்து நம் முன்னோர்களை வழிபட வேண்டும். இது பொதுவாக எல்லா அமாவாசைகளிலுமே கடைபிடிக்கலாம்.

இது நாம் முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனும், நம் தாய் தந்தையர்களுக்கு செலுத்தும் நன்றியும் தான் இந்தத் தர்ப்பணத்தை அனைவரும் செய்ய வேண்டிய அவசியமாகிறது.

தாய் தந்தையர் இருவருமே இல்லாதவர் பெண் மட்டும் இருந்தால் அவர்கள் கோவிலில் போய் அன்னதானம் செய்து விட வேண்டும். வீட்டிலும் இலை போட்டு நாலு பேருக்கு அன்னதானம் செய்து வழிபடலாம். ஆண்களுக்கு கண்டிப்பாக விரதம் எடுக்க வேண்டியது அவசியம்.

கடற்கரை ஆலயங்கள்…உதாரணமாக ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய இடங்கள், காவிரி, பவானி, தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஆலயங்களைச் சொல்லலாம். சிவகாசி, அவினாசி, தென்காசி, விருதாச்சலம், வாரணாசி, கயா ஆகிய புனித திருத்தலங்களிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

நம்ம ஊருலயே உள்ள சிவன் கோவில்களிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். இங்கே எல்லாம் நம்மால் போக முடியல என்றால் வீட்டிலேயே கொடுக்கலாம். வீட்டில் அந்தணரைக் கூப்பிட்டு யாகம் பண்ணி அவர்களுக்கு தானம் கொடுத்து தர்ப்பணம் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் காலையில் இருந்து உபவாசம் இருக்கலாம். தாய் தந்தையருக்காக எல்லா அமாவாசைகளிலும் விரதம் இருக்க வேண்டியது ஒரு மகனின் கடமை.

Aadi amavasai1
Aadi amavasai

எல்லா அமாவாசைகளிலும் இருக்க முடியவில்லை என்றால் ஆடி அமாவாசை அன்றாவது கட்டாயம் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததும் நல்லா குளித்து விட்டு வீட்டிலேயே உங்கள் கால் படாத இடம் எதுவென பாருங்கள். அங்கு சென்று ஒரு சுத்தமான சொம்பை எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். எள்ளையும் தண்ணீரையும் நம் முன்னோர்களை நினைத்துக் கொண்டு காசி காசி என்று சொல்லி இறைக்க வேண்டும்.

அதன்பின்னர் தாய் தந்தையரை நினைத்து வழிபாடு பண்ணுங்கள். பிறகு ஆலயத்திற்குச் சென்று வழிபட முடிந்தால் பண்ணுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய வேலைக்குச் சென்று விடுங்கள். அன்று எதுவும் சாப்பிடக்கூடாது. மதியம் இலை போட்டு வீட்டில் சாப்பிடலாம். அல்லது வேலைக்குச் செல்பவர்கள் சாப்பாட்டை எடுத்து விட்டுப் போகலாம்.

அது உங்கள் தாய் தந்தையருக்குப் பிடித்த உணவாக இருக்க வேண்டும். வடை, பாயாசம் செய்து கொள்ளுங்கள். அத்துடன் கீரை, வாழைக்காய், பூசணிக்காய் ஆகிய காய்கறிகள் முக்கியமாக உணவில் இருக்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவு இடுங்கள். அதற்குப் பிறகு நாம் உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அன்று மாலை நெய்தீபம் ஏற்றி அப்பா, அம்மாவை நினைத்து வழிபடுங்கள்.

அன்றைய தினம் யாராவது இருவருக்காவது உணவளிக்க வேண்டும் என்பது நியதி. அன்று மதியமே 2 பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் ரொம்ப ரொம்ப புண்ணியம். அமாவாசை அன்று நாம் செய்யும் வழிபாடு நம் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல. அந்த பலன் நம் பிள்ளைகளையும் வந்து சேரும்.

பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். விரதத்திற்கு சமைக்கும்போது கூட கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தான் சமைக்க வேண்டும். வெறும் வயிற்றோடு மாமனார், மாமியாருக்கு சமைக்கக்கூடாது. அன்று இரவு ஒரு கைப்பிடியாவது சாதம் சாப்பிட வேண்டும். அப்போது தான் மாமனார், மாமியாரின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும்.

Leave a Comment