ஆடிப்பூரம் என்றாலே அம்பாளுக்கு வளையல் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வளையல்களைத் தருவது என்பது நாம் அறிந்த விஷயம். இதற்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது. ஏன் நாம் அம்பாளுக்கு வளையல் சாற்றுகிறோம் என்ற உண்மை இந்தக் கதையைக் கேட்டால் தெரியும்.
ஆந்திராவில் இருந்து ஒரு வியாபாரி வளையல் விற்க வருகிறார். இவர் அடிக்கடி சென்னைக்குச் சென்று வளையல் விற்றுள்ளார். அது போல் வழக்கமாக ஒரு தடவை வளையல் இப்படி சென்னைக்கு வந்து வளையல் விற்றுள்ளார். மீதமுள்ள வளையலை மறுநாள் விற்போம் என்று எண்ணிய இவர் அதனை பேக் செய்து பத்திரமாக எடுத்து வந்துள்ளார். பெரியபாளையம் அருகில் வரும்போது இவருக்கு ரொம்பவே களைப்பாக இருந்துள்ளது.
அதனால் அங்குள்ள ஒரு வேப்பமரத்தின் அடியில் நல்லா படுத்து தூங்கிவிட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து திடுக்கிட்டு எழுந்துள்ளார். அங்கு தனது வளையல் ஒன்றையுமே காணவில்லை. எங்கடா போச்சுன்னு பதட்டத்துடன் அங்கும் இங்கும் தேடி ஓடுகிறார். ஆனால் கிடைக்கவில்லை. ரொம்ப கவலையோடு சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். அன்று இரவு கவலையுடன் படுத்து இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது.
நான் தான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்களை நான் தான் போட்டுள்ளேன். பார்…எவ்வளவு அழகாக இருக்கிறது…! இந்த வளையல்களை என்னை மகிழ்வித்துள்ளன. அதனால் உனக்கு பல வரங்கள் தருகிறேன். நீ படுத்து தூங்கிய வேப்பமரத்தின் அடியில் சுயம்புவாக உள்ள என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்றாள்;.
இந்தக்கனவை தனது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் சொன்னார் அந்த வளையல் வியாபாரி. அது மட்டுமில்லாமல் சென்னைக்கும் அவர்களை அழைத்து வந்து பெரியபாளையம் மக்களுக்கும் தனது கனவு குறித்து சொன்னார். அவர் படுத்துத் தூங்கிய வேப்பமரத்தடிக்கு சென்று பார்த்தார். அங்கு சுயம்புவாக உருவான அம்மன் சிலை இருந்தது.
அந்த அம்மனுக்குக் கோவில் கட்டி பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து வளையல் வியாபாரியின் வளையல்களை அணிவிக்க வேண்டும் என்ற ஆசையால் தான் அம்பாள் அவரது வளையல்களை எடுத்திருக்கிறாள். அதனால் நாமும் அம்பாளுக்கு வளையல் சாற்றி நல்ல வரம் பெற வேண்டும் என்று பொதுமக்கள் எண்ணி அம்பாளுக்கு வளையல் சாற்றி வழிபடலாயினர்.
அன்று முதல் ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளையல் சாற்றும் வைபவம் அரங்கேறத் தொடங்கியதாக ஒரு கதை உண்டு. அம்மனுக்கு சாற்றிய வளையல்களைக் கர்ப்பிணிப் பெண்கள் அணிந்தால் விரைவில் குழந்தைப் பாக்கியம் கிட்டும். அதே போல் குழந்தை உண்டாகி இருப்பவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும். கல்யாணமாகாதவர்கள் அணிந்தால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.