புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து

By Staff

Published:

766d022f82fac37ba62a2e321ce4567c

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும்  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

அங்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறையின் மேற்கூரை எரிந்து சேதமாகிவிட்டது. கோவில் விளக்கில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடுகளில் கலந்து கொள்வது வழக்கம். மிகவும் பழமையான இந்த கோவில் பெண்களின் சபரிமலை என வர்ணிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளதால் தற்போது கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த  நிலையில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

தினசரி பூஜைகளுக்கு பிறகு ஆலய நடை மூடிய பிறகு காலை 7 மணியளவில் கோவிலில் கருவறைக்கு மேலே தீ பற்றி எரிவதை கண்ட ஆலய அர்ச்சகர்கள் ஊர்மக்கள் குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்தில் கருவறையின் மேற்கூரை முற்றிலும் எரிந்தது. நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். தீ வெளியில் இருந்து வைக்கப்பட்டது போல் அல்லாமல் உள்ளிருந்து எரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறி இருக்கும் காவல்துறையினர் விளக்கின் தீபத்தில் இருந்து நெருப்பு பற்றி இருக்கலாம் என்று கூறுகின்றனர். தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உடனடியாக  ஆய்வு செய்து மறுசீரமைப்பு பணிகளை தொடக்கவும் பரிகார பூஜைகளை செய்யவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக நிகழ்விடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

பரிகார பூஜைகள் நடத்தப்பட்டதை அடுத்து மாலை நேரத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன.

Leave a Comment