இன்றைய காலகட்டத்தில் பலர் காலில் கருப்பு கயிறு அணிந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். பல இளைஞர்கள், இளம்பெண்கள், ட்ரென்ட்க்காகவும் கருப்பு கயிறுகளை கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த கருப்பு கயிறு கட்டும் வழக்கம் நம் முன்னோர்கள் காலம் தொட்டு இருந்து வந்ததுதான். அப்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கான காரணம் என்ன யார் யார் அணியலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
கருப்பு நிறத்திற்கு தீய சக்தியை விரட்டும் தன்மை இருக்கிறது. கருப்பு கயிறு கட்டினால் காத்து கருப்பு அண்டாது என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் மதிய நேரத்தில் வெளியே செல்லும்போதும் இரவில் வெளியே செல்லும்போதும் கருப்பு பொட்டு வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் சிலர் கையில், கழுத்தில், இடுப்பில் கூட கருப்பு கயிறு கட்டி விடுவார்கள் அது சாஸ்திர சம்பிரதாயமாகவே பின்பற்றப்பட்டு வந்தது.
குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும் தாய்க்கும் கருப்பு கயிறு கட்டுவார்கள். இதனால் குழந்தைக்கு தாய்க்கும் கண் திருஷ்டி படாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் இளைஞர்கள் இந்த கருப்பு கயறை பேஷனாக கட்டி கொள்கிறார்கள். ஆனால் அதை அப்படி செய்யக்கூடாது. கருப்பு கயிறு ஒருவர் காலில் கட்ட வேண்டும் என்று நினைத்தால் அதற்கென்று உரிய நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தான் கட்ட வேண்டும்.
பொதுவாக காலில் கருப்பு கயிறு கட்டி கொண்டால் கண் திருஷ்டி விலகும் என்பது பொதுவான ஒன்று. இது மட்டுமில்லாமல் அஷ்டம சனி, ஏழரைச் சனி , அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி போன்ற காலங்களில் அவதிப்படுபவர்கள் சனி பகவானின் தரும் இன்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சனி பகவானை நினைத்து செவ்வாய்க்கிழமை காலில் கருப்பு கயிறு கட்டிக் கொண்டால் சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் குறையும். இதற்கு காரணம் என்னவென்றால் சனிபகவான் முதலில் ஒருவரின் காலை தான் பற்றுவார் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
எனவே காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். அத்துடன் ராகு கேது பாதிப்புகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. கருப்பு கயிறு கட்டுவதற்கு முன்னால் சனிபகவான் சன்னதியில் அல்லது சிவாலயங்களுக்கு சென்று இந்த கருப்பு கயிறை வைத்து வணங்கிவிட்டு வீட்டிற்கு எடுத்து வந்து கட்டலாம் அல்லது வீட்டில் கருப்பு கயிறு தயார் செய்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விளக்கேற்றி விளக்கு முன்பு அந்த கருப்பு கயிறை வைத்து வேண்டிக்கொண்டு அந்த கருப்பு கயிற்றில் முதலில் நவக்கிரகங்களை நினைத்து 9 முடிச்சுகளை போட வேண்டும். பின்னர் கருப்பு கயிறை கட்டிய பிறகு சனி பகவான் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இந்த கருப்பு கயிறை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் கட்டிக் கொண்டால் நன்மைகள் உண்டாகும்.